அந்த்யோதயா ரயில்: கடலூர் மாவட்டம் புறக்கணிப்பு
தாம்பரம்-திருநெல்வேலி இடையிலான அந்த்யோதயா ரயில் சேவையில் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்த அமைப்புகள் தயாராகி வருகின்றன.


தாம்பரம்-திருநெல்வேலி இடையிலான அந்த்யோதயா ரயில் சேவையில் கடலூர் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்த அமைப்புகள் தயாராகி வருகின்றன.
தென் மாவட்ட மக்களின் வசதிக்காக தாம்பரம் - திருநெல்வேலி இடையே முன்பதிவில்லாத 16 பெட்டிகளைக் கொண்ட ரயில் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் இயக்கப்பட வேண்டிய இந்த ரயில் கடைசி நாளில் திடீரென ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து, இந்த ரயில் வெள்ளிக்கிழமை (ஜூன் 8) முதல் இயக்கப்பட்டது. ஆனால், பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த கடலூர் மாவட்ட மக்களுக்கு இந்த ரயிலால் பலன் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வழியாக சுமார் 80 கி.மீ. தொலைவு பயணிக்கும் இந்த ரயில், மாவட்டத்தில் எந்த ரயில் நிலையத்திலும் நின்று செல்லவில்லை என்பதே ஏமாற்றத்துக்கு காரணம். விழுப்புரத்திலிருந்து கடலூர் மாவட்டம் வழியாகச் சென்று மயிலாடுதுறையில் மட்டுமே நிற்கிறது.
மாவட்டத்தின் தலைநகரான கடலூர் திருப்பாதிரிபுலியூர், ஆன்மிக நகரான சிதம்பரம், வணிக நகரான பண்ருட்டி ஆகிய ரயில் நிலையங்களில் இந்த ரயில் நிற்கவில்லை. இந்தப் புறக்கணிப்பால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவாகப் பல்வேறு பொதுநல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் மு.நிஜாமுதீன் கூறியதாவது: தென் மாவட்டங்களுக்கான ரயிலை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்த ரயிலை கடலூர் மாவட்ட மக்கள் மட்டுமல்லாது, புதுவையைச் சேர்ந்தவர்களும் பயன்படுத்த முடியும். ஆனால், இந்த ரயில் நிற்காமல் செல்வதால் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளோம்.
தற்போது கடலூரில் துறைமுகம் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிப்காட் நிறுவனங்கள் இயங்குவதோடு, ஜவுளிப் பூங்கா அமைக்கப்படுகிறது.
சிதம்பரத்தில் புகழ் பெற்ற நடராஜர் கோயில், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்டவை அமைந்துள்ளன. எனவே, இரு நகரங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிலையில், ரயில்வே நிர்வாகம் கடலூர் மாவட்டத்தைப் புறக்கணித்ததை ஏற்க முடியாது. விரைவில் இதுதொடர்பாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
கடலூர் ரயில் பயணிகள் நலச் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் வெண்புறா சி.குமார் கூறியதாவது:
ஒவ்வொரு புதிய ரயில் அறிவிப்பின்போதும் கடலூர் மாவட்டம் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கூறும்போது அவர்கள் ரயில்வே நிர்வாகத்தைத் தொடர்பு கொள்கிறார்கள். ஆனால், தொடர் அழுத்தம் இல்லாத காரணத்தால் கடலூர் மாவட்டம் ரயில்வே நிர்வாகத்தால் புறக்கணிப்புக்குள்ளாகி வருகிறது. மக்களைப் பாதிக்கும் இந்த பிரச்னை தொடர்பாக ரயில் பயணிகள் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும், கடலூர் அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பிலும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் அவர்.
இதுகுறித்து கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.அருண்மொழிதேவன் கூறியதாவது: இந்த பிரச்னை தொடர்பாக விரைவில் மத்திய ரயில்வே அமைச்சரைச் சந்தித்து வலியுறுத்துவேன். இந்த ரயில் கடலூர் மாவட்டத்தில் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...