நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்ககம் மீட்கப்படுமா?

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மீட்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

News image
Updated On :9 ஜூன் 2018, 10:07 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மீட்கப்பட வேண்டும் என கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைநகரில் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரால் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 1928-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தப் பல்கலைக்கழகத்தில் தொலைதூரக் கல்வி இயக்ககம் 1979-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. மத்திய அரசின் அனைவருக்கும் எழுத்தறிவு' என்ற உன்னத நோக்கத்தை அடையும்பொருட்டு, நாட்டிலேயே முதல் முறையாக தொலைதூரக் கல்வி இயக்ககம் இங்குதான் தொடங்கப்பட்டது.
இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மிகப் பெரிய நிதி ஆதாரமாக தொலைதூரக் கல்வி இயக்ககம் திகழ்ந்தது. பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது, தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் வருவாயிலிருந்து கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ஆம் ஆண்டு வரை நல்ல வருவாய் ஈட்டி வந்த இந்த இயக்ககம், தற்போது கடும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. 2013,14,15 ஆகிய ஆண்டுகள் வரை ஆண்டுக்கு சுமார் ரூ.150 கோடி அளவில் வருவாய் வந்தது. இந்த நிலையில், 2016-17-இல் ரூ.100 கோடியாகவும், 2017-18-ஆம் ஆண்டில் ரூ.70 கோடியாகவும் வருவாய் சரிந்தது. தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2012-13-ஆம் ஆண்டில் 1,19,984 மாணவர்களும், 2013-14-இல் 1,35,597 மாணவர்களும், 2014-15-இல் 1,34, 842 மாணவர்களும், 2015-16-இல் 1,01,187 மாணவர்களும் சேர்ந்தனர். 2016-17-ஆம் ஆண்டில் 1,02,088 மாணவர்கள் சேர்ந்து பயின்று வருகின்றனர்.
தற்போது பல்கலைக்கழக மானியக் குழுவானது, பல்கலைக்கழகங்களின் நாக் ஸ்கோர் 3.26 புள்ளிகள் இருந்தால் மட்டுமே தொலைதூரக் கல்வி இயக்கத்தை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ஆனால் இந்தப் பல்கலைக்கழகம் 3.00 புள்ளிகளுடன், நாக் கமிட்டியின் ஏ-கிரேட்' அந்தஸ்து பெற்றிருந்தபோதும், பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய உத்தரவால் இந்த கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி இயக்ககத்துக்கு அனுமதி சேர்க்கை செய்ய முடியவில்லை. எனவே, பல்கலைக்கழக நிர்வாகம் உயர்கல்வித் துறைச் செயலர் மூலம் அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது. மேலும் இதுகுறித்து நீதிமன்றத்தை அணுகவும் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழக நிதி ஆதாரம் மிகவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் உயர்கல்வித் துறை இதில் சிறப்பு கவனம் செலுத்தி, தொலைதூரக் கல்வி இயக்ககம் மீண்டும் அனுமதி சேர்க்கையை செயல்படுத்திடவும், வளர்ச்சியை உறுதிப்படுத்தி, வருவாயைப் பெருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதுகுறித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சி.சுப்பிரமணியன் கூறியதாவது: அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே உரிய கட்டமைப்பு, மனித வளம் உள்ளிட்ட வசதிகள் இருந்தபோதும், கணினி அறிவியல், கலை அறிவியல் பாட சேர்க்கைகளை புரிந்துணர்வு ஒப்பந்தம் என்ற பெயரில் தனியாருக்கு அளித்ததால் இந்த நிறுவத்துக்கு மிகப் பெரிய நிதியிழப்பு ஆண்டுதோறும் ஏற்பட்டு வருகிறது.
பல தனியார் கல்வி நிறுவனத்தினர் இந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கையைப் பங்கிட்டு, அதிக லாபம் அடைந்து வருகின்றனர். தமிழக அரசு நியமித்த நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா இந்த வருவாய்ப் பங்கீட்டை 70% பல்கலைக்கழகத்துக்கு எனவும், 30% தனியாருக்கு எனவும் திருத்தியமைத்தார். அதுவும் பல்கலைக்கழகத்தில் உரிய கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்கள் இல்லாத பாடங்களுக்கு மட்டுமே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. ஆனால், தற்போது வருவாய்ப் பங்கீடானது தலைகீழாக மாறியுள்ளது. 50:50 அல்லது தனியாருக்கு 60%, பல்கலைக்கழகத்துக்கு 40% என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதுவே வருவாய் இழப்புக்கு காரணம்.
பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் 2014-15-இல் முடிந்தது. 2015-16-ஆம் ஆண்டு முதல் மாநில எல்லைப் பிரச்னை காரணமாக யுஜிசி இன்னும் அங்கீகாரம் வழங்கவில்லை. ஆனால் நமது பல்கலைக்கழக சட்டம்-2013 இந்தியா முழுவதிலும், வெளி நாடுகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதிக்கிறது. நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறோம் .
இந்த நிலையில் பல்கலைக்கழக மானியக் குழுவானது, நாக் ஸ்கோர் 3.26 -ஆக இருந்தால்தான் மாணவர் சேர்க்கை நடத்த இயலும் என சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
பழம்பெரும் பல்கலைக்கழகம் என்பதாலும், தொலைதூரக் கல்வியை நாட்டிலேயே முதல் முதலில் தொடங்கிய பெருமை கொண்டது என்பதாலும் யுஜிசி விதியிலிருந்து விலக்கு அளிக்கக் கோரி பல்கலைக்கழக நிர்வாகமும், தமிழக அரசும் யுஜிசிக்கு கடிதம் எழுதியுள்ளன. ஆனால், இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. விரைவில் நீதிமன்றம் மூலம் தடை ஆணை பெற்று மாணவர் சேர்க்கை நடைபெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.