காவிரி பிரச்னையில் எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வலியுறுத்தல்

காவிரி பிரச்னையில் தமிழக எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
Updated on
1 min read

காவிரி பிரச்னையில் தமிழக எதிர்க்கட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
 கடலூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
 காவிரி பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தியதை வரவேற்கிறோம். ஆனால், மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு எதையும் கேட்டுப் பெறவில்லை. நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தவில்லை. ஒக்கி புயல், வறட்சிக்கான நிவாரணத்தை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. ரேஷன் பொருள்களின் விலையேற்றம் மட்டுமே நடந்துள்ளது.
 சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. அதேநேரம், அமைச்சர் நிதின் கட்கரி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளார். எனவே, தமிழகத்தில் மீண்டும் எதிர்க்கட்சிகள் இணைந்து திட்டமிட வேண்டும். இதுதொடர்பாக மற்றக் கட்சியினருடன் மார்க்சிஸ்ட் கட்சி கலந்து பேசி முடிவெடுக்கும்.
 காவிரியில் தண்ணீர் திறக்கப்படாததால் சுமார் 4.25 லட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகியுள்ளன. இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த காலங்களுக்கான பயிர்க் காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை. கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய ரூ. 1,400 கோடியை சர்க்கரை ஆலைகள் நிலுவை வைத்துள்ளன. இதனைப் பெற்றுத் தராமல் சர்க்கரை ஆலை நிர்வாகத்துக்கு ஆதரவாக உள்ளது.
 எனவே, கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் வருகிற மார்ச் 6- ஆம் தேதி தமிழக முதல்வர் வீட்டின் எதிரே காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும்.
 விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து தலித் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாவது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக கட்சியினர் அடங்கிய குழுவினர் மார்ச் 2 -ஆம் தேதி நேரில் விசாரணை நடத்தவுள்ளனர். அதேபோல, ஆந்திரத்தில் தமிழக கூலித் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது, தண்ணீரில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டது, காணாமல் போனது தொடர்பாக விசாரணை நடத்தவும் ஒரு குழு மார்ச் 2- ஆம் தேதி விசாரணை நடத்தும் என்றார் அவர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com