நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் விவசாயிகள்!
கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாகச் செயல்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.


சிதம்பரம்: கடலூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முறையாகச் செயல்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த மாவட்டத்தில் ஆற்றுப் பாசனம், ஏரிப் பாசனம், ஆழ்குழாய்க் கிணறு பாசனம் என சுமார் 5,25,280 ஏக்கர் விளை நிலங்களில் விவசாயப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றில் சுமார் 2,52,000 ஏக்கர் பரப்பில் காவிரிப் பாசனம் மற்றும் காவிரி அல்லாத பாசனப் பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. விவசாயிகளின் நலன் கருதி தமிழக அரசானது நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது.
நிகழாண்டில் கடலூர் மாவட்டத்தில் 100 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன. இவற்றில், 64 இடங்களில் மட்டுமே நெல் கொள்முதல் நடைபெறுவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த காலங்களில் நெய்வேலி நவீன அரிசி ஆலை, வடகுத்து, காடாம்புலியூர், நத்தம், புவனகிரி, கீரப்பாளையம் ஆகிய 6 இடங்களில் தாற்காலிகக் கிட்டங்கிகள் அமைக்கப்பட்டன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல் மூட்டைகளை உடனடியாக லாரிகள் மூலம் தாற்காலிகக் கிட்டங்கிகளுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். இதனால், விவசாயிகள் கொண்டு வரும் நெல் மூட்டைகளை தாமதமின்றி கொள்முதல் செய்ய முடிந்தது.
ஆனால், நிகழாண்டில் தாற்காலிகக் கிட்டங்கிகள் ஏதும் திறக்கப்படவில்லையாம். தற்போது செயல்படும் 64 நேரடி கொள்முதல் நிலையங்களில் பெறப்படும் நெல் மூட்டைகள், நெய்வேலியில் அமைந்துள்ள நவீன அரிசி ஆலைக்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இந்த அரிசி ஆலையானது நாள் ஒன்றுக்கு 100 டன் நெல் அரைவைத் திறன்கொண்டதாக இருந்தாலும், 80 டன் மட்டுமே அரைக்க முடியும். இதனால், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை சேமிக்க போதிய இட வசதி இல்லை. இதன் காரணமாக, நெய்வேலி நவீன ஆரிசி ஆலைக்கு முன்பாக சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும், நெல் மூட்டைகளுடன் லாரிகள் நாள்கணக்கில் நிற்கின்றன. மேலும், கொள்முதல் நிலையங்களிலும் விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் பாதுகாப்பின்றி நாள் கணக்கில் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
நிகழாண்டு, 106 நேரடி கொள்முதல் நிலையங்களைத் திறக்க மாவட்ட ஆட்சியரால் உத்தரவிடப்பட்டது. ஆனால், 64 கொள்முதல் நிலையங்களுக்கு மட்டுமே ஜனவரி கடைசி வாரத்தில் கொள்முதல் கணக்காளர்கள், உதவியாளர்கள், இரவு நேரப் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர் பெ.ரவீந்திரன் கூறியதாவது: கடலூர் மாவட்டத்தில் செயல்படும் 64 கொள்முதல் நிலையங்களிள் மூலம் மார்ச் 1 ஆம் தேதி வரை 16,771 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினத்தில், 64 கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் 7,500 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வெளியேற்ற முடியாமல் தரை இருப்பாக உள்ளது. விவசாயிகள் கொண்டுவந்த 12,000 டன் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன. கடந்த 4 நாள்களாக விவசாயிகள் நெல் மூட்டைகளுடன் காத்துக் கிடக்கின்றனர்.
அறுவடை தொடங்கியபோது வியாபாரிகளால் குறைந்த விலைக்கு வாங்கப்பட்ட நெல், நேரடி கொள்முதல் நிலையங்கள் செயல்படத் தொடங்கியபோது, 62 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.1,100-க்கு விலைபோனது. தற்போது கொள்முதல் நிலையங்களில் தேக்கம் ஏற்பட்டவுடன் வியாபாரிகளால் விலை குறைத்து வாங்கப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து முறையாகச் செயல்பட்டால் இந்த நிலை ஏற்படாது.
ஆண்டு தோறும் இலக்கு நிர்ணயித்து நெல் கொள்முதல் செய்யும் தமிழக அரசு, நிகழாண்டு குடிமைப் பொருள் விநியோகத்துக்கு 20 லட்சம் டன் நெல் கொள்முதலுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் டன் இலக்கு நிர்ணயித்து, மார்ச் 1-ஆம் தேதி வரை 16,771 டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், வியாபாரிகள் பெருமளவில் நெல் மூட்டைகளை வாங்கிச் சென்றுவிட்டனர். கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் கடலூர் மண்டல நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 90 ஆயிரம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் மெத்தனமாகச் செயல்படுவதே இதற்குக் காரணம். உரிய காலத்தில் நெல் கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்துவதால், பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு விற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால், விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுவதோடு, கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் அரிசி விநியோகத்துக்குத் தேவையான நெல் கொள்முதல் செய்ய முடிமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தனிக் கவனம் செலுத்தி, உடனடியாக தாற்காலிக நெல் கிட்டங்கிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கொள்முதல் நிலையங்களில் காத்துக் கிடக்கும் விவசாயிகளின் நெல் மூட்டைகளை விரைவாகக் கொள்முதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ரவீந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...