தொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

வீடு சீரமைப்புப் பணியில் தரமின்மை: கட்டுமான நிறுவனம் ரூ.1.27 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வீட்டை சீரமைக்கும் பணியில் தரமில்லாததால், தனியார் கட்டுமான நிறுவனம் ரூ.1.27 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Updated On :14 மே 2018, 10:50 pm

வீட்டை சீரமைக்கும் பணியில் தரமில்லாததால், தனியார் கட்டுமான நிறுவனம் ரூ.1.27 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடலூர் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடலூர் பாதிரிக்குப்பம் கணேஷ் நகரைச் சேர்ந்தவர் செ.வரதராஜன் (78). என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். 1997-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இவரது வீட்டின் மேற்கூரையில் நீர்க் கசிவு ஏற்பட்டதால் அதை சரிசெய்திட புதுச்சேரியில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தை அணுகியுள்ளார். அந்த நிறுவனத்தின் பொறியாளர் கே.சங்கர் என்பவர், அமெரிக்காவின் நானோ தொழில்நுட்ப முறையில் வீட்டின் மேற்கூரையை சரிசெய்வதாகக் கூறி, அதற்குக் கட்டணமாக ரூ.96,055 பெற்றாராம்.
மேலும், இந்தப் பணிக்கு 15 ஆண்டுகள் உத்தரவாதமும் அளிக்கப்பட்டதாம்.
இதன்படி, 2012-ஆம் ஆண்டு மே மாதம் சீரமைப்புப் பணி முடிக்கப்பட்டது. இந்த நிலையில், அதே ஆண்டு அக்டோபர் மாதம் பெய்த மழையால் வீட்டின் மேற்கூரையில் பல்வேறு இடங்களில் நீர்க் கசிவு ஏற்பட்டதாம்.
இதுகுறித்து வரதராஜன் பலமுறை தனியார் கட்டுமான நிறுவனப் பொறியாளரைத் தொடர்புகொண்டும், வீட்டில் ஏற்பட்ட பழுது சரிசெய்து தரப்படவில்லையாம். இதையடுத்து வரதராஜன் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு பொதுச் செயலர் எம்.நிஜாமுதீன் மூலமாக, கடலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் 2013-ஆம் ஆண்டு வழக்கு தொடுத்தார்.
குறைதீர் மன்றத் தலைவர் கே.லட்சுமிகாந்தம், உறுப்பினர்கள் பி.எழிலரசி, டி.வி.பாபு ஆகியோர் முன்னிலையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
அப்போது, வீட்டை முறையாகப் பராமரிக்காததே தண்ணீர் கசிவுக்கு காரணமென பொறியாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, பொதுப் பணித் துறை பொறியாளர், வழக்குரைஞர் ஆகியோர் அந்த வீட்டை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க குறைதீர் மன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அவர்கள் அளித்த அறிக்கையில், தனியார் கட்டுமான நிறுவனம் நானோ தொழில்நுட்பத்தை முறையாகப் பயன்படுத்தவில்லை எனத் தெரிய வந்தது. சீரமைப்புப் பணி நடந்த 5 மாதங்களிலேயே மீண்டும் வீட்டில் பழுது ஏற்பட்டதால், அந்தப் பணியை மீண்டும் செய்திட மற்றொரு நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் வழங்குவதோடு, புகார்தாரருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக ரூ.25 ஆயிரமும், வழக்குச் செலவுக்காக ரூ.2 ஆயிரமும், அதற்கு வட்டியாக 9 சதவீதமும் 2 மாதங்களுக்குள் அளிக்க வேண்டுமென தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.