ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் போராட்டம்: அரசுப் பணிகளில் பாதிப்பில்லை

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் அரசுப் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
Published on
Updated on
1 min read

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் அரசுப் பணிகளில் பாதிப்பு ஏற்படவில்லை.
 இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 2003 முதல் பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடும் முடிவை கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை தற்செயல் விடுப்பு போராட்டம் அறிவித்தனர்.
 அதன்படி கடலூர் மாவட்டத்தில் வருவாய்த் துறையில் 1,854 ஊழியர்களில் 290 பேர் மட்டுமே தற்செயல் விடுப்பு எடுத்தனர். ஊரக வளர்ச்சித் துறையில் 690 பேரில் 284 பேர் விடுப்பு எடுத்தனர். கல்வித் துறையில் மழையின் காரணமாக விடுப்பு அறிவிக்கப்பட்டதால், அந்தத் துறையில் விடுப்பு எடுக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதேபோல மற்றத் துறைகளிலும் கூட்டமைப்பினர் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், மற்ற சங்கத்தைச் சேர்ந்தவர்களும், சங்கங்களைச் சேராதவர்களும் பணியில் ஈடுபட்டதால் பொதுமக்களுக்கான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
 கடலூரில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரினஅ பழைய அலுவலகம் அருகே அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 சிதம்பரம்: இதேபோல, சிதம்பரத்தில் கோட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பேத்கர் தலைமை வகித்தார். அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில துணைச் செயலர் தமிழ்குமரன், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி இளஞ்செழியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் தமிழ்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்தி மழையில் நனைந்தபடி முழக்கமிட்டனர். ஆசிரியர் மன்றம் மணிமாறன் மற்றும் இலங்கேசன், கார்மேகம், தாமோதரன், மகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
 பண்ருட்டி: தற்செயல் விடுப்பு போராட்டத்தையொட்டி, பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒரு சில பணியாளர்களே பணிக்கு வந்திருந்தனர். இதனால், இந்த அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. இதனால், பணிகளில் பாதிப்பு ஏற்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதேபோல, அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் பணிகள் பாதிக்கப்பட்டன.
 குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சுமார் 10 பேர் மட்டுமே தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், இதரப் பணியாளர்கள் பணிக்கு வந்ததாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 50 சதவீதம் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பணிகள் பாதிக்கப்பட்டன.
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com