சர்வதேச யோகா தினம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சர்வதேச யோகா தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
 இந்தியாவின் தொன்மைமிக்க கலைகளில் ஒன்றான யோகாவை உலக மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சர்வதேச யோகா தினம் ஜூன் 21-ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், விளையாட்டு அமைப்புகள் சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கடலூர் மாவட்ட யோகாசன சங்கம் சார்பில் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் திரளானோர் பங்கேற்று யோகா பயிற்சிகளை மேற்கொண்டனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா, இயற்கை மருத்துவர் சாதுசிவராமன், யோகாசன சங்கத் தலைவர் ஜெ.சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கடலூர் மாவட்ட நேரு இளையோர் மையம் சார்பில் கடலூரில் இமாகுலேட் கல்லூரி வளாகத்தில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் மா.ஹெலன்ராணி தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். சார்-ஆட்சியர் கே.எம்.சரயூ சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று சான்றிதழ், கேடயம் வழங்கினார்.
 நிகழ்ச்சியில் 400 மாணவிகள் யோகாசனங்களை செய்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் மா.ராஜா, நாட்டு நலப் பணித் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.திருமுகம், கல்லூரிச் செயலர் அருள்சகோதரி சகாயம், கல்லூரி முதல்வர் சுசீலா, பிளஸ் தொண்டு நிறுவன செயலர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 கடலூர் அரசு மருத்துவமனை செவிலியர்கள் பயிற்சி பள்ளி சார்பில் சர்வதேச யோகா தின விழிப்புணர்வு பேரணி கடலூர் நகர அரங்கு அருகே தொடங்கி நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தொடக்கி வைத்தார். பேரணியில் மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் ஆர்.கலா, துணை இயக்குநர் எஸ்.கீதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 என்சிசி கப்பற்படையின் தமிழ்நாடு 5-ஆவது பிரிவு சார்பில் கம்மியம்பேட்டை புனித வளனார் பள்ளி வளாகத்தில் யோகா தின விழா நடைபெற்றது. இதில், என்சிசி கமாண்டர் டி.தினகரன், துணை அதிகாரிகள் ஜெ.ஜான்ராபர்ட், ஆரோக்கியதாஸ், அருண்நிர்மல், ஏழுமலை, ஜனா மற்றும் புனித வளனார் பள்ளி, டேனிஷ்மிஷன் பள்ளி மாணவர்கள், என்சிசி மாணவர்கள் பங்கேற்று பல்வேறு ஆசனங்களை செய்தனர்.
 தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி முதல்வர் ப.குமரன் தலைமை வகித்தார். உடல்கல்வி இயக்குநர் தி.குமணன் வழிகாட்டுதலின்பேரில் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
 விருத்தாசலம்: விருத்தாசலம் வட்டம், கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி தாளாளர் சி.ஆர்.ஜெயசங்கர் தலைமையில் சர்வதேச யோகா தின விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் அ.முருகன், நிர்வாக அலுவலர் புனிதன் உள்பட சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு 12 ஆசனங்கள் மற்றும் மூச்சுப்பயிற்சி செய்தனர். ஆசிரியை புஷ்பா அரவிந்தா தேவி நன்றி கூறினார்.
 சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக யோகா கல்வி மையம் சார்பில், ஐந்தாவது சர்வதேச யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு, கல்விப் புல முதல்வர் ஆர்.ஞானதேவன் தலைமை வகித்தார். யோகா கல்வி மைய இயக்குநர் வே.கோபிநாத் வரவேற்றார். தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன் சிறப்புரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் என்.கிருஷ்ணமோகன் யோகா பயிற்சியை தொடக்கி வைத்து உரையாற்றினார்.
 விழாவில் பல்கலைக்கழகம், 32 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள், முத்தையா மற்றும் கூடுவெளி தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் படையினர், பொதுமக்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் உள்பட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர். முனைவர் வெங்கடாஜலபதி வழிநடத்தினார்.
 பொறியியல் புல முதல்வர் ரகுகாந்தன், உடல்கல்வியியல் துறைத் தலைவர் பி.வி.செல்வம், விளையாட்டு அறிவியல் துறை இயக்குநர் சுதன்பால்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை யோகக் கல்வி மைய இயக்குநர் வி.கோபிநாத் செய்திருந்தார். துணைப் பேராசிரியர் வெங்கடாஜலபதி நன்றி கூறினார். விழாவில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
 நெய்வேலி: சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில், என்எல்சி இந்தியா நிறுவன விளையாட்டு மேம்பாட்டு மையம் சார்பில் வெள்ளிக்கிழமை யோகா பயிற்சி நடைபெற்றது. இதில் என்எல்சி இந்தியா நிறுவன செயல் இயக்குநர்கள் ஹேமந்த் குமார், அரவிந்த் குமார், காசிநாதன், நெய்வேலி மகளிர் மன்றப் புரவலர் சாந்தி விக்ரமன், நிறுவன உயர் அதிகாரிகள், ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்று யோகா பயிற்சி செய்தனர்.
 நெய்வேலி 19-ஆவது வட்டம் துணை தபால் நிலைய அலுவலகத்தில் அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில், அறிவுத் திருக்கோயில் யோகா பேராசிரியர்கள் பார்த்திபன், பூமாலை உள்ளிட்டோர் யோகாவின் முக்கியத்தும் குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர். இதில் அஞ்சலக ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்துகண்டனர்.
 வடலூர்: வடலூர் புதுநகர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் திருமுருகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் முன்னிலை வகித்தார். என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வுத் திட்டம் சார்பில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். மாநில அளவில் நடைபெற்ற யோகா பயிற்சியில் முதலிடம் பெற்ற 8-ஆம் வகுப்பு மாணவி சந்தியாவிற்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உடல்கல்வி ஆசிரியை ஷர்மிளா செய்திருந்தார்.
 தீவளூர்: நல்லூர் ஒன்றியம், தீவளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வெ.சுப்ரமணியன் தலைமையில் மாணவர்கள் யோகா பயிற்சி செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com