தேர்தல் முடிவை வெளியிடுவதில் தாமதம் ஏன்?
கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடுவதில் அதிக காலதாமதம்


கடலூர் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடுவதில் அதிக காலதாமதம் ஏற்பட்டதற்கு, தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் முறையான பயிற்சியோடு செயல்படாததே காரணம் எனக் கூறப்படுகிறது.
கடலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் கடந்த ஏப்.18 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை தேவனாம்பட்டினம் அரசுக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது. 1,499 வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கடலூர், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகள் வாரியாக, தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை பணியில் மேஜைக்கு 3 பேர் ஈடுபடுத்தப்பட்டனர்.
காலை 8 மணிக்கு தபால் மூலமாக பெறப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதன்பின்னர் 8.30 மணிக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தபால் வாக்குகள் எண்ணிக்கை பணியே 15 நிமிடம் தாமதமாகத்தான் தொடங்கியது. இதனால், மின்னணு வாக்குப் பதிவு எண்ணிக்கையும் காலதாமதத்துடனேயே தொடங்கியது. ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் அமைக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக விருத்தாசலம் சட்டப் பேரவைத் தொகுதியில் 282 வாக்குச் சாவடிகள் உள்ளதால் 21 சுற்றுகள் வரை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், 23 சுற்றுகள் வரையில் வாக்கு எண்ணிக்கை நீடித்தது. குறைந்தபட்ச வாக்குச் சாவடியைக் கொண்ட கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் 17 சுற்றுகளில் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட வேண்டும். அதன்படி, மாலை 6.30 மணிக்குள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் முழுமையாக எண்ணி முடிக்கப்பட்டன. ஆனால், அந்த தொகுதியில் 7 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முடியாத நிலை ஏற்பட்டது.
அதாவது, வாக்குப் பதிவு நடைபெற்ற நாளில் வாக்குப் பதிவு நிறைவுபெற்றவுடன் மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரத்தில் குளோஸ் (இப்ர்ள்ங்) என்ற பொத்தானை அழுத்த வேண்டும். அப்போதுதான் அந்த இயந்திரத்தில் எந்த நாளில், எத்தனை மணிக்கு வாக்குப் பதிவு முடிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கையின்போது ரிசல்ட் என்ற பொத்தானை அழுத்தினால் எப்போது வாக்குப் பதிவு நடைபெற்றது, வேட்பாளர்கள் விவரம் போன்றவையும் தெரியவரும். ஆனால், வாக்குப் பதிவுக்குப் பின்னர் இந்த பொத்தானை தேர்தல் அலுவலர் அழுத்தவில்லை. இதனால், ரிசல்ட் பொத்தானை அழுத்திய பின்னர் வாக்கு விவரம் தெரியவரவில்லை.
இவ்வாறு கடலூர் மக்களவைத் தொகுதி முழுவதும் 37 வாக்குப் பதிவு இயந்திரங்கள் இதுபோன்ற கோளாறை சந்தித்தன. இதனை எவ்வாறு சரிசெய்வது என்ற தொழில்நுட்ப விவரங்களை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அறிந்திருக்கவில்லை. மேலும், இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்களிடம் எடுத்துக் கூறி அவர்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பிறகே வாக்கு எண்ணிக்கையை தொடங்க முடியும்.
ஆனால், இதனை எவ்வாறு வேட்பாளர்களிடம் தெரிவிப்பதென மாவட்ட நிர்வாகம் தயங்கியதால் சுமார் 3 மணி நேரம் வரை பழுதான இயந்திரத்திலுள்ள வாக்குகளை எண்ண முடியாமல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. மேலும், சில வாக்குப் பதிவு மையங்களில், வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பாக அந்த வாக்குச் சாவடியில் உள்ள வேட்பாளர்களின் முகவர்கள் மூலமாக 50 மாதிரி வாக்குகள் செலுத்தப்படும். இந்த வாக்குகளையும் அழிக்காமல் தொடர்ந்து வாக்குப் பதிவு நடைபெற்றதால் அதை எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்வது என்ற குழப்பமும் நீண்ட நேரம் நீடித்தது.
அதன்பின்னர், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்திலுள்ள (விவிபாட்) ஒப்புகைச் சீட்டுகளைக் கொண்டு குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டன. இவ்வாறு, முறையாக பயிற்சி பெறாத அலுவலர்கள் மூலமாக தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் இரவு 8.30 மணிக்குள் முடிக்கப்பட வேண்டிய தேர்தல் நடைமுறைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்கே நிறைவுபெற்றன. இது வேட்பாளர்கள் மற்றும் முறையாக வாக்கு எண்ணிக்கையை முடித்த மற்ற ஊழியர்களையும் சோர்வடையச் செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...