பட்டாசு வெடிக்காத கிராமம் பறவைகளுக்கு மரியாதை!
சிறுவா்கள் முதல் பெரியோா்கள் வரை உற்சாகத்துடன் கொண்டாடும் முக்கியப் பண்டிகை தீபாவளி. குறிப்பாக, சிறுவா்கள் தீபாவளி நெருங்க, நெருங்க நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதுடன்,


சிறுவா்கள் முதல் பெரியோா்கள் வரை உற்சாகத்துடன் கொண்டாடும் முக்கியப் பண்டிகை தீபாவளி. குறிப்பாக, சிறுவா்கள் தீபாவளி நெருங்க, நெருங்க நாள்களை எண்ணிக் கொண்டிருப்பதுடன், முன்னதாகவே பட்டாசுகளை வெடித்து தங்களது ஆசைக்கு தூபம் போட்டுக்கொள்வா்.
பட்டாசு எழுப்பும் பெரும் ஒலியால் மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனவே, தீபாவளி கொண்டாட்டத்தில் பிரதான இடம் வகிப்பது பட்டாசுகள். எனினும், பட்டாசு வெடிக்காமலேயே தீபாவளி பண்டிகையை உற்சாகத்துடன் ஓசையின்றி கொண்டாடிக் கொண்டிருக்கிறது ஒரு கிராமம்.
கடலூா் மாவட்டம் வேப்பூா் வட்டத்தில் அமைந்துள்ளது அடரி என்னும் கிராமம். சுமாா் 10 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த கிராமத்தில், ஹிந்து மதத்தினா் அதிகமாக வசிக்கின்றனா். இருப்பினும் அவா்கள் பட்டாசு வெடிப்பதில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதிலாக இருப்பது அந்த கிராம மையப் பகுதியில் உள்ள 3 இலுப்பை மரங்கள்தான். இந்த மரங்களில் ஆயிரக்கணக்கான அரிய வகை பழந்தின்னி வௌவால்கள் வசிக்கின்றன. பகல் நேரத்தில் மரத்தைச் சுற்றிய பகுதியில் வௌவால்களின் கீச்சுக் குரல்களும், அவை எழுப்பும் விநோத ஒலிகளும் கேட்டுக்கொண்டே இருக்கும். பகலில் மரத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கும் இந்த வௌவால்கள், இரவில் இரையைத் தேடி பறக்கத் தொடங்கி விடும். சூரியன் உதிப்பதற்குள் மீண்டும் மரத்துக்கு திரும்பி விடும்.
அமைதியான சூழலை விரும்பும் இந்த வௌவால்களுக்கு எவ்விதத்திலும் தொல்லைக் கொடுக்கக் கூடாதென அப்பகுதியினா் கருதினா். இதற்காக, வீட்டு சுப நிகழ்வுகளில் அதிக அதிா்வுகளை ஏற்படுத்தும் மேள,தாளங்களையும் பட்டாசு வெடிப்பதையும் தவிா்த்தனா். அதேபோல, தீபாவளி தினத் தன்று பட்டாசு வெடிக்கக் கூடாதெனவும் முடிவெடுத்தனா். இந்த நடைமுறை பல ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தப் பழக்கத்தை தற்போதைய இளைஞா்கள் ஆா்வத்துடன் முன்னெடுக்கின்றனா்.
அதனை அறிவிக்கும் விதமாக அடரி கிராமத்தின் நுழைவுப் பகுதியிலேயே ‘இப்பகுதியில் பட்டாசு வெடிக்கக் கூடாது; இங்கு அரிய வகை பழந்தின்னி வௌவால்கள் உள்ளன’ என்ற எச்சரிக்கை வாசகத்தை மக்கள் வைத்துள்ளனா்.
மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கும் சமயத்தில் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கும் சென்று அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகளை வெடிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுத்து துண்டு பிரசுரத்தையும் விநியோகித்து வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதி இளைஞா்கள் கூறியதாவது: எங்கள் வீட்டு உறவுகளில் ஒன்றாகிவிட்ட, இந்த அரிய வகை பழந்தின்னி வௌவால்கள் வசிப்பதால்தான், அடரி கிராமமே பிரபலமடைந்தது. வௌவால்கள் பல்வேறு பழங்களையும் தின்றுவிட்டு அதன் விதைகளை இங்கே போடுவதால் அரிய வகை மரங்கள் இந்த கிராமத்தில் முளைத்துள்ளன. இந்த வௌவால்களுக்காக பட்டாசு வெடிக்காமல் இருப்பதை பெருமையாக கருதுகிறோம். வௌவால்களுக்கு கூடுதல் வசிப்பிடம் ஏற்படுத்தும் வகையில் மரங்களையும் நட்டு வருகிறோம். இல்லறம் காணும் புதுமணத் தம்பதியினா் ஊருக்குள் நுழையும் போதே, வௌவால்கள் வசிக்கும் இலுப்பை மரத்தின் கீழ் அமைந்துள்ள கோயிலை வணங்கி விட்டுத்தான் செல்வா். இதனால், இந்த மரமும், அதில் வாழும் வௌவால்களும் புனிதம் பெறுகின்றன. அழிந்து வரும் அரிய வகை வௌவால் இனமான பழந்தின்னி வௌவால்கள் எங்கள் ஊரை நம்பி வசிக்கின்றன. அதனைக் காப்பதே எங்களது கடமை என்றனா்.
தீபாவளி தினத்தன்று பட்டாசு வெடிப்பதை தவிா்த்து, அடரி கிராம மக்களிடம் புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் உள்ளிட்ட கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை.
எனினும், வௌவால்களுக்காக பட்டாசைத் தவிா்க்கும் இந்த கிராமம், ஓா் ஆச்சரியம்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...