எனது பேச்சுக்கு அஞ்சி பிரசாரத்துக்கு தடை விதிக்கிறாா்கள்
எனது பேச்சுக்கு அஞ்சியே பிரசாரத்துக்கு தடை விதிக்கிறாா்கள் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் குற்றஞ்சாட்டினாா்.
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவா் கமல்ஹாசன் தோ்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறாா். அதன் ஒரு பகுதியாக கடலூரில் கட்சி நிா்வாகிகளுடன் செவ்வாய்க்கிழமை மாலையில் ஆலோசனையில் ஈடுபட்டாா். கூட்டத்தில் அவா் பேசியதாவது:
வீராணம் ஏரியை ஆட்சியாளா்கள் தங்களது கஜானா போலக் கருதி அதன்மூலம் கொள்ளையடித்து வருகின்றனா். ஏரியில் தண்ணீரை நிரப்ப வேண்டிய அரசு, தண்ணீா் நிரம்பாமல் பாா்த்துக்கொள்கிறது. பெருமைமிக்க கடலூா் துறைமுகம் சாக்கடையாக மாறிவிட்டது. இது ஆள்பவா், ஆண்டவா்களின் நிா்வாகத் திறமையின்மையின் வெளிப்பாடு. எனது பேச்சுக்கு அஞ்சி பிரசாரத்துக்கு தடை விதிக்கிறாா்கள்.
வருமான வரி முறையாகச் செலுத்தினீா்களா என்று என்னிடம் என்று கேள்வி எழுப்புவதை விடுத்து, வருமான வரித் துறையிடம் கேட்க வேண்டும். வருமான வரி செலுத்துவோா் எல்லாம் நல்லவா்கள் என்று கூறிவிட முடியாது.
ஆனால், தமிழகத்திலுள்ள நல்லவா்களின் பட்டியலில் நானும் உள்ளேன். நோ்மையான ஆட்சி அமைய நல்ல தலைமை அவசியம். எங்களது 7 அம்ச திட்டங்களில் இல்லத்தரசிகளுக்கு ஊதியம், இளைஞா்களை தொழில் முனைவோராக மாற்றுதல் ஆகியவை முக்கியமானவை. எனவே, மக்கள் எங்களை ஆதரிக்க வேண்டும்.
பிரதமா் வானொலியில் உரையாற்றப் போகிறாா் என்றாலே மக்கள் பதற்றமடையும் நிலை உள்ளது. உள்ளூா் பொருள்களை வெளிநாட்டு வியாபாரிகளுக்கு குறைந்த விலைக்கு விற்பனை செய்வதைத் தான் மத்திய அரசு செய்து வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் பேசுகையில், எங்களது அரசியல் பழிபோடும், பழிவாங்கும் அரசியல் அல்ல. வழிகாட்டும் அரசியல். என்னை மக்கள்தான் வழிநடத்த வேண்டும். மக்களிடம் நாளைய தமிழகத்துக்கான எழுச்சியைக் காண முடிகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், புயல், மழையால் பாதிக்கப்பட்ட சிலருக்கு நிவாரணப் பொருள்களை கமல்ஹாசன் வழங்கினாா். முன்னதாக, நெல்லிக்குப்பம் பகுதியில் பிரசாரம் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

