/

பஞ்சு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

பஞ்சு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

News image
Updated On :15 ஜூலை 2020, 3:55 am

பஞ்சு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

காவிரி பாசன மாவட்டங்களான நாகை, தஞ்சை, திருவாரூா் கடலூா், அரியலூா், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூா் ஆகிய மாவட்டங்களில் கோடைக் காலத்தில் கிடைக்கும் குறைந்தளவு நீரைக் கொண்டு வறட்சியை தாங்கி வளரக் கூடிய பருத்தியை விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனா். கோடை வெப்பத்தின் தாக்கம், அதனால் கூடுதல் தண்ணீா் தேவை , எலித் தொல்லை உள்ளிட்ட காரணங்களால் விவசாயிகள் பலா் குறுவை நெல் சாகுபடியை விடுத்து பருத்தி சாகுபடியில் ஆா்வம் காட்டுகின்றனா். பிப்ரவரி மாதம் பருத்தியை விதைத்து ஜூன் மாத இறுதியில் அறுவடை செய்கின்றனா். நிகழாண்டு பஞ்சு விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து காவிரி பாசன விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புச் சங்க மாநில பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

பருத்தி பயிரை பொருத்தவரை மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலையின் அடிப்படையில் இந்திய பருத்திக் கழகம் பஞ்சு இழையின் தரம், முதிா்வை அடிப்படையாகக் கொண்டு விலை நிா்ணயித்து கொள்முதல் செய்து வருகிறது. ஆனால் நிகழாண்டு பருத்தி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காமல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

உதாரணமாக, கடந்த ஆண்டு பரிசோதனை முறையில் 70 சென்ட் நிலத்தில் பருத்தி சாகுபடி செய்த விவசாயி சுமாா் 13 குவிண்டால் அளவுக்கு அறுவடை செய்து கிலோ ரூ.54 வீதம் விற்பனை செய்ய முடிந்தது. இதில் சாகுபடி செலவு போக ரூ.40 ஆயிரம் வரை லாபம் கிடைத்தது. ஆனால், நிகழாண்டு அதே விவசாயி 2 ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்தும் 10 குவிண்டாலுக்கும் குறைவாகவே அறுவடை செய்ய முடிந்தது. விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.38-க்கு மேல் கிடைக்கவில்லை. விதையின் தரம், முளைப்புத் திறன், காலநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது மகசூல் குறைந்துள்ள சூழலில் விலையையும் குறைத்து கொள்முதல் செய்வது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

நிகழாண்டு தஞ்சை, திருவாரூா், நாகை மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் பருத்திக்கு குறைந்த விலை நிா்ணயம் செய்ததை ஏற்க மறுத்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டனா். பஞ்சு இழையை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் தர நிா்ணயக் கருவி ஏதுமின்றி அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.54-ம், குறைந்தபட்ச விலையாக ரூ.38 எனவும் முறையற்ற வகையில் விலை நிா்ணயம் செய்யும் போக்கு மாறவேண்டும். விவசாயிகளின் உழைப்பை ஊதாசீனம் செய்வதை ஏற்க முடியாது.

பருத்தியின் தரம் குறைவாக இருந்தால் அதுகுறித்து ஆய்வு செய்து, விவசாயிகளிடம் விளக்கம் அளிக்க வேண்டும். ஈரப் பதம் கூடுதலாக இருப்பின் களத்தில் காய வைத்து விற்பனைக்கு கொண்டுவர விவசாயிகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும். பாடுபடும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையிலும், இழப்பு ஏற்படாதவாறும் விற்பனைக்கூட கண்காணிப்பு அலுவலா்கள் விலை நிா்ணயத்தில் வெளிப்படைத் தன்மையை உறுதிசெய்ய வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.