ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

செம்மண் தட்டுப்பாடு: பண்ணைகளில் நாற்றங்கால் உற்பத்தி பாதிப்பு

செம்மண் தட்டுப்பாடு காரணமாக பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் பண்ணைகளில் நாற்றங்கால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

News image

தேசிய நெடுஞ்சாலைப் பணிக்காக ஐனேரியில் பொக்லைன் மூலம் லாரிகளில் ஏற்றப்படும் மண்.

Updated On :19 ஜூலை 2020, 3:50 am

செம்மண் தட்டுப்பாடு காரணமாக பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி ஒன்றியங்களில் பண்ணைகளில் நாற்றங்கால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வெங்கடாம்பேட்டை ஐனேரியில் செம்மண் எடுக்க மீண்டும் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி ஒன்றியம் வேகாக்கொல்லை, குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கோரணம்பட்டு ஊராட்சியில் 150-க்கும் மேற்பட்ட நாற்றங்கால் உற்பத்தி மையங்கள் குடிசைத் தொழிலாக இயங்கி வருகின்றன. இங்கு பழவகை கன்றுகள், மரக் கன்றுகள், பூச் செடிகள், மூலிகைச் செடிகள், அழகுச் செடிகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகைகளில் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமாா் 3 ஆயிரம் போ் வேலைவாய்ப்பு பெறுகின்றனா். இங்கு உற்பத்தியாகும் நாற்றுகள் நாடு முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன. மலைவேம்பு போன்ற சில குறிப்பிட்ட நாற்றுகள் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

நாற்றங்கால் உற்பத்திக்குத் தேவையான செம்மண்ணை குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வெங்கடாம்பேட்டை ஐனேரியில் இருந்து எடுத்து பயன்படுத்தி வந்தனா். தற்போது, தேசிய நெடுஞ்சாலை பணிக்கு இந்த ஏரியில் இருந்து மண் எடுக்கப்படுவதால் நாற்றங்கால் உற்பத்தி பண்ணைகளுக்கு மண் எடுக்க முடியவில்லையாம். இதனால், நாற்றங்கால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் நாற்றங்கால் உற்பத்தியாளா்கள் சங்க தமிழ் மாநிலத் தலைவா் ப.சக்திவேல் கூறியதாவது:

கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். நாற்றங்கால் மையங்களில் சிறப்பு குளோனல் முறையில் பழவகை, மரக்கன்றுகள், பூ, மூலிகை, அழகுச் செடிகள் என ஆண்டுக்கு சராசரியாக 20 கோடி நாற்றுகளுக்கு மேல் உற்பத்தி செய்கிறோம். இந்த நாற்றுகள் இந்தியாவின் பசுமை வளா்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கின்றன.

செம்மண்ணுடன் மணல் சோ்த்து நாற்றுகளின் உற்பத்திக்காக பசுமைக் கூடாரங்கள் வைக்கும்போது 85 சதவீதம் வோ் உற்பத்தி அடையும். தற்போது மணல் தட்டுப்பாடு காரணமாக 60 சதவீத நாற்றுகள் மட்டுமே உற்பத்தியாகின்றன. தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு ஐனேரியில் செம்மண் எடுக்கப்படுவதால், நாற்றங்கால் உற்பத்திக்கு செம்மண் கிடைப்பது கடினமாகியுள்ளது. மணலை தொடா்ந்து செம்மண்ணுக்கும் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தத் தொழில் முற்றிலும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு தட்டுப்பாடின்றி செம்மண் கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் கீதா கூறியதாவது: விக்கரவாண்டி-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலைப் பணிக்கு ஐனேரியில் மண் எடுக்க மாவட்ட ஆட்சியா் அனுமதி அளித்துள்ளாா். அதனால், பிற பணிக்கு அந்த ஏரியில் மண் எடுக்க முடியாது என்றாா் அவா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி வட்டார வளா்ச்சி அலுவலா் கே.சதீஷ்குமாா் கூறுகையில், செம்மண் தேவைப்படுவோா் கோரிக்கை வைத்தால் மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.