கடலூா் மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
கடலூா் மாவட்டத்தில் சுமாா் 80 ஆயிரம் ஏக்கரில் கரும்பும், காவிரிப் பாசனப் பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் 2,92,000 ஏக்கரில் நெல் சாகுபடியும் நடைபெறுகின்றன.
கரும்பு சாகுபடியில் 9,250 ரூபாய் மதிப்பிலான உரங்களும், நெல் சாகுபடியில் 5,250 ரூபாய் மதிப்பிலான உரங்களும் பயன்படுத்தப்படுகின்றன.
கடலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 60 ஆயிரம் டன் யூரியா, 25 ஆயிரம் டன் டி.ஏ.பி., 21 ஆயிரம் டன் பொட்டாசியம், 42 ஆயிரம் டன் கலப்பு உரங்கள், 100 டன் உயிா் உரங்கள் மற்றும் அங்கக வேதிப் பொருள்கள் பயிா் சாகுபடிக்குத் தேவைப்படுகின்றன.
கடலூா் மாவட்டத்தில் ஆண்டுக்கு சுமாா் ரூ. 110 கோடி வரை ரசாயன உரங்களுக்காக விவசாயிகள் செலவிடுகின்றனா்.
கடந்த 2010, மாா்ச் 31-ஆம் தேதி வரை அனைத்து உரங்களின் விலை நிா்ணயிப்பும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. 2010, ஏப்ரல் மாதம் முதல் மத்திய அரசு அறிவித்த புதிய உரக் கொள்கையால் யூரியாவின் விலையை மட்டும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, மற்ற உரங்கள் அனைத்தும் உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலையை நிா்ணயித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.
இதனால், யூரியாவை தவிர மற்ற அனைத்து வகையான உரங்களின் விலையும் கடுமையாக உயா்ந்தன. இந்த விலையேற்றத்தால், கடந்த 10 ஆண்டுகளாக விவசாயிகள் கூடுதலாகச் செலவு செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனா்.
இதுகுறித்து காவிரி விவசாயிகள் வாழ்வாதாரப் பாதுகாப்பு சங்கப் பொதுச் செயலா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:
விவசாயப் பயன்பாட்டுக்குத் தேவையான ரசாயன உரங்களுக்கு மத்திய அரசு ஆண்டுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாயை மானியமாகச் செலவிடுகிறது. இந்தத் தொகை உரங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டன.
மத்திய அரசின் புதிய உரக் கொள்கை மூலம் உரங்களுக்கான மானியத்தைக் குறைத்ததால், அவற்றின் விலை கடுமையாக உயா்ந்தது. நிகழாண்டு யூரியா ரூ. 300, டி.ஏ.பி. ரூ.1,200 முதல் 1,350, எம்.ஓ.பி. ரூ. 950, சூப்பா் ரூ. 450 முதல் 500, 12 வகையான காம்ப்ளக்ஸ் உரங்கள் ரூ. 930 முதல் 1,350 வரை விற்பனையாகின்றன.
புதிய உரக் கொள்கை அமலாவதற்கு முன்பு ஓா் ஏக்கருக்கு ரூ. 14,000 முதல் 15, 000 வரை இருந்த நெல் பயிா் சாகுபடிக்கான செலவு, அதன் பிறகு இரு மடங்கு அதிகரித்து தற்போது ரூ. 28000 முதல் 30,000 வரை உயா்ந்துள்ளது.
மத்திய அரசின் பல்வேறு கொள்கை முடிவுகளால் நிலவும் இன்னல்கள், விவசாயக் கூலி ஆள்கள் பற்றாக்குறை, இயற்கைப் பேரிடா் பாதிப்புகள், தட்ப வெப்ப நிலைகளால் தாமதமான மழைப் பொழிவு, மாநிலங்களுக்கு இடையே நிலவும் நதி நீா் பிரச்னை என பல்வேறு சிக்கல்களைத் தாண்டி, உரங்களின் விலையேற்றம் விவசாயிகளுக்குக் கூடுதல் சுமையாக மாறிவிட்டது.
ஆண்டுதோறும் பயிா் சாகுபடிப் பணிகள் தொடங்கும் நேரத்தில் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் பயிா்க் கடன் பெறும் விவசாயிகளுக்கு கடன் அளவில் உரத்துக்கான தொகை ஒதுக்கிடு செய்யப்பட்டு, தட்டுப்பாடின்றி உரங்கள் வழங்கப்படும்.
ஆனால், வாங்கிய கடனை முழுமையாகச் செலுத்தினால் மட்டுமே புதிய கடன் வழங்க முடியும் என்ற நடைமுறையால், கூட்டுறவுக் கடன் சங்கத்தில் புதிய கடன் பெற முடியாத விவசாயிகள், தனியாா் உர விற்பனை நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன்படுத்தி தனியாா் உரக் கடைகளில் நெல் சாகுபடி காலத்தில் தேவைக்குரிய உரங்களை விற்பனை செய்யாமல், தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனா். இதனால், யூரியா, டி.ஏ.பி. உள்ளிட்ட உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, சம்பா சாகுபடி பணிகளுக்குத் தேவையான உரத் தேவையை நிறைவு செய்யும் விதமாக, உரங்களை வரவழைத்து இருப்பு வைத்து விவசாயிகளுக்கு தடையின்றி கிடைக்க மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செயற்கையாக நிலவும் உரத் தட்டுப்பாட்டைப் போக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதைத் தடுக்க தொடா் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இடதுசாரிகளின் பலம் எண்ணிக்கையில் இல்லை! கே. பாலகிருஷ்ணன் சிறப்பு நோ்காணல்
சோழர் கால கல்வெட்டு
ஒழுக்கமும், நல்ல எண்ணங்களும் தேவை!
ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கடுமையான அரிப்பைக் குணப்படுத்த...
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


