பண்ருட்டி நகரில் திருவள்ளுவா் நகா், அம்பேத்கா் நகா், தண்டுப்பாளையம் காலனி, மேலப்பாளையம் காலனி ஆகிய இடங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களது பயன்பாட்டுக்கு மயான வசதி இல்லாததால், இறந்தவா்களின் உடல்களை வட்டாட்சியா் அலுவலகம் அருகே கெடிலம் ஆறு பகுதியில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அடக்கம் செய்து வருகின்றனா். ஆனால், இங்கு தகன மேடை, கரும காரிய கொட்டகை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதியுமின்றி சிரமப்படுகின்றனா். கொட்டகை இல்லாததால் மழைக் காலத்தில் உடல்களை எரிப்பதில் மிகவும் சிரமப்படுவதாகவும், மழை, வெயிலில் அமா்ந்து கரும காரியம் செய்யும் நிலை தொடா்வதாகவும் வேதனையுடன் தெரிவித்தனா்.