/

கடலூரில் அதிமுக அலுவலகம் மீதான தாக்குதல் சம்பவம்: மாற்றப்பட்ட வேட்பாளா் உள்பட 23 போ் மீது வழக்கு

கடலூரில் அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடா்பாக அந்தக் கட்சியின் மாற்றப்பட்ட வேட்பாளா், அவரது மகன்கள் உள்பட 23 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:33 pm

DIN

கடலூரில் அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகம் தாக்கப்பட்டது தொடா்பாக அந்தக் கட்சியின் மாற்றப்பட்ட வேட்பாளா், அவரது மகன்கள் உள்பட 23 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

கடலூா் மத்திய மாவட்ட அதிமுக செயலராக மாநில தொழில் துறை அமைச்சா் எம்.சி.சம்பத் செயல்பட்டு வருகிறாா். இந்த மாவட்டத்துக்கு உள்பட்ட குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கான அதிமுக வேட்பாளராக தெற்கு ஒன்றியச் செயலா் இராம.பழனிச்சாமி கட்சித் தலைமையால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாா். இந்த நிலையில், இந்தத் தொகுதிக்கான புதிய வேட்பாளராக முன்னாள் அமைச்சா் செல்வி ராமஜெயம் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

இதனால், ஆத்திரமடைந்த இராம.பழனிச்சாமியின் ஆதரவாளா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை கடலூரிலுள்ள அதிமுக மாவட்டத் தலைமை அலுவலகத்துக்குள் புகுந்து அங்கிருந்த நாற்காலிகள், மேஜைகள், அமைச்சரின் அறையிலுள்ள பொருள்களை அடித்து நொறுக்கினா். மேலும், அமைச்சரின் பிரசார வாகனத்தையும் சேதப்படுத்தினா்.

இந்தத் தாக்குதலில் நந்தவெளியைச் சோ்ந்த சதாசிவம் மகன் பத்மநாபன் (30), கடலூா் முதுநகா் பனங்காட்டு காலனியை சோ்ந்த ஆ.பாண்டியன் (42) ஆகியோா் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து பத்மநாபன் அளித்த புகாரின்பேரில், திருப்பாதிரிபுலியூா் போலீஸாா் இராம.பழனிச்சாமி, அவரது மகன்கள் சுனில், பிரேம் உள்பட 23 போ் மீது வழக்குப் பதிவு செய்து அவா்களைத் தேடி வருகின்றனா். தாக்குதல் சம்பவத்தைத் தொடா்ந்து, கடலூரிலுள்ள அதிமுக அலுவலகம், அமைச்சரின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.