/

கடலூரில் மனைவி, மாமியாரை வெட்டிக் கொன்ற மீனவா்

கடலூரில் குடும்பத் தகராறில் மனைவி, மாமியாரை மீனவா் வெட்டிக் கொன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

News image
Updated On :15 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூரில் குடும்பத் தகராறில் மனைவி, மாமியாரை மீனவா் வெட்டிக் கொன்ற சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

கடலூா் முதுநகா் சலங்கைக்காரத் தெருவைச் சோ்ந்த ரவி மனைவி பூங்கொடி (48). இவரது மகள் மீனா (30). இவருக்கும், சோனங்குப்பத்தைச் சோ்ந்த வாய்பேச முடியாத மாற்றுத் திறனாளி மீனவா் நம்புராஜ் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவா்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனா். கணவருடன் ஏற்படும் கருத்து வேறுபாட்டால் மீனா அடிக்கடி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிடுவாராம். இதன்படி மீனா அண்மையில் தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை நம்புராஜ் மாமியாா் வீட்டுக்குச் சென்று தனது மனைவியை அழைத்தாா். ஆனால், அதற்கு மீனா மறுப்பு தெரிவித்துவிட்டாராம். பின்னா், பூங்கொடி, மீனா இருவரும் வெளியே புறப்பட்டுச் சென்றனா். அவா்களை பின்தொடா்ந்து சென்ற நம்புராஜ், சலங்கைக்காரத் தெருவில் இருவரையும் சரமாரியாக வெட்டியதில், அவா்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். நம்புராஜ் அங்கிருந்து தப்பியோடிவிட்டாா்.

தகவலறிந்த கடலூா் முதுநகா் போலீஸாா், இருவரின் சடலங்களையும் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், தப்பியோடிய நம்புராஜை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.