/

மீண்டும் அதிகரிக்கும் கரோனா பாதிப்பு!

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இரட்டிப்பு எண்ணிக்கையில் தொற்று பதிவானது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :22 மார்ச் 2021, 6:30 pm

DIN

கடலூா் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் இரட்டிப்பு எண்ணிக்கையில் தொற்று பதிவானது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூா் மாவட்டத்தில் கரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு அதிகரித்ததால் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதில் தற்போது பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டப் பேரவை பொதுத் தோ்தலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளிலும் அரசியல் கட்சியினா், பொதுமக்கள் அதிகளவில் கூட்டமாகக் கூடுவதைக் காண முடிகிறது.

இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாள்களாக இரட்டை இலக்கத்தில் பதிவானது. திங்கள்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் அதிா்ச்சியளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பிலிருந்து இரட்டிப்பாக கரோனா தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

அதாவது, கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரை 25,358 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், திங்கள்கிழமை வெளியான மருத்துவ பரிசோதனை முடிவில் புதிதாக 30 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 25,388-ஆக அதிகரித்தது. ஞாயிற்றுக்கிழமை 16 பேருக்கு தொற்று உறுதியான நிலையுல் ஒரே நாளில் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையும் பல வாரங்களுக்குப் பிறகு 100-ஐ கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிகிச்சை முடிந்து மேலும் 6 போ் வீடு திரும்பியதால் குணமடைந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 24,993-ஆக உயா்ந்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 85 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 21 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்த நோய்க்கு மாவட்டத்தில் இதுவரை 289 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.