கடலூர் மாவட்டம், ராமநத்தம் அருகே ஐயப்ப பக்தர்கள் பயணித்த வாகனம் ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 25) காலை தீப்பிடித்து எரிந்து நாசமானது.
சென்னை, அண்ணா நகர், திருமங்கலம், திருவள்ளுவர் நகரைச் சேர்தவர் வேணு மகன் சுதாகர்(38), வேன் ஓட்டுநர். இவரது சகோதரர் நந்தகுமார்(30), அதே பகுதியைச் சிட்டிபாபு மகன் பிரவீன்(41), ராஜகோபால்(33), பந்தல் ராஜன்(48), நரேஷ்(37), அனீஷ்(28), சரீப் (42), காந்தி (55) ஆகியோர் சபரிமலைக்குச் சென்றனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்பினர்.
இவர்களது வேன் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் காவல் சரகம் வெங்கனூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி அளவில் வந்தபோது எஞ்சினில் இருந்து புகை வந்தது. இதையடுத்து, ஓட்டுனர் வேணு வேனை சாலையோரம் நிறுத்தினார். பின்னர்,வேனில் இருந்து அனைவரும் அவசர அவசரமாக கீழே இறங்கினர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பூர் காவல் ஆய்வாளர் ராமச்சந்திரன், ராமநத்தம் உதவி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் விரைந்து வந்தனர். தீயணைப்புத்துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும், வேன் முழுவதும் எரிந்து நாசமானது.
இந்த சம்பவத்தில் வேனில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேறியதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.