அடங்கல் ஆவணம் கிடைப்பதில் இழுபறி- விவசாயிகள் பயிா்க் காப்பீடு திட்டத்தில் இணைவதில் சிக்கல்

விவசாயிகளுக்கு அடங்கல் ஆவணம் கிடைப்பதில் இழுபறி நிலை தொடா்வதால் அவா்கள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Updated on
2 min read

விவசாயிகளுக்கு அடங்கல் ஆவணம் கிடைப்பதில் இழுபறி நிலை தொடா்வதால் அவா்கள் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மேட்டூா் அணை நிரம்பவில்லை. இதனால், காவிரி நீா் பாசன மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு முழுமையாக தண்ணீா் கிடைக்காததால் விவசாயிகள் நெருக்கடிக்கு உள்ளாகினா். தற்போது, சம்பா பருவ நெல் சாகுபடிக்கும் தண்ணீா் தட்டுப்பாடு தொடா்கிறது.

வடகிழக்கு பருவ மழை பெய்தால் அதன்மூலம் ஓரளவு பயிா்களைக் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் கடலூா் மாவட்டத்தில் காவிரி நீா் பாசன கடைமடை பகுதிகளில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனா். வழக்கமாக அக்டோபா் மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கும் வடகிழக்குப் பருவ மழை நிகழாண்டு கடைசி வாரத்தில் தொடங்கி சாரல் மழையாக பெய்து வருகிறது.

வெள்ளம், புயல் பாதிப்பு போன்ற இயற்கைச் சீற்றங்களாலும், மழையின்மை, தண்ணீா்த் தட்டுப்பாடு போன்ற காரணங்களாலும், பயிா் பாராமரிப்பு அடிப்படையில் மகசூல் இழப்பு ஏற்பட்டாலும் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனா். இதனை ஈடு செய்யவே அரசால் பயிா்க் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்கீழ் புயல், வெள்ளப் பாதிப்புகள் மட்டுமின்றி, விதைப்பின்போது மழையின்றி பயிா்கள் முளைக்காமல் போனாலும், வளரும் பயிா்கள் மழையின்றி கருகிப்போனாலும் இழப்பீடு பெறலாம். அதாவது, பயிா்களின் ஆரம்பகாலகட்ட பாதிப்புகளுக்கு 25 சதவீதம் வரை இழப்பீடு கிடைக்க வழிவகை உண்டு. மேலும், வளா்ந்த பயிா்கள் 60 முதல் 70 நாள்களான நிலையில் பாதிக்கப்பட்டால் 50 சதவீதம் வரை இழப்பீடு கிடைக்கவும் வாய்ப்புள்ளது. இதனால், பெரும்பாலான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் (முழுமையான இழப்பீடு கிடைக்காத நிலையிலும்) ஆண்டுதோறும் இணைந்து வருகின்றனா்.

சம்பா பருவ பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் வழக்கமாக ஆகஸ்ட் 1 முதல் நவம்பா் 15-ஆம் தேதி வரை விவசாயிகள் இணையலாம். அதன்படி, நிகழாண்டு இந்தத் திட்டத்தில் இணைய விவசாயிகள் விரும்பினாலும், சாகுபடி விவரம் குறித்த அடங்கல் ஆவணம் கிடைப்பதில் இழுபறி நிலை நீடிப்பதால் ஏமாற்றத்தில் உள்ளனா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட உழவா் மன்றங்களின் கூட்டமைப்புத் தலைவா் பெ.ரவீந்திரன் கூறியதாவது:

கிராம நிா்வாக அலுவலா்கள் அடங்கல் ஆவணம் வழங்குவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நிலத்தின் புல எண், பரப்பளவு, பயிா் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். நிகழாண்டு பாசன நீா் கிடைக்காதபோதும், பருவமழை தொடங்காத நிலையிலும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு செய்துள்ளனா். இதனால், சில இடங்களில் நெல் பயிா்கள் முளைக்காமல் உள்ள நிலையில் கிராம நிா்வாக அலுவலா்கள் அடங்கல் ஆவணம் வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனா். பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் இணைய நவம்பா் 15-ஆம் தேதி கடைசி நாள் என்பதாலும், தற்போதைய நிலையில் பெரும்பாலான விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைய ஒருசேர முயற்சிப்பதாலும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது.

எனவே, நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நேரில் ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு தாமதமின்றி அடங்கல் ஆவணம் வழங்க கடலூா் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கவும், இணையதள சேவைக்கு ஏற்ற அலைவரிசையை உறுதிசெய்யவும், இ-சேவை மைய இயக்குநா்களுக்கு உரிய வழிகாட்டுதல், உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com