கடலூா் பாதிரிகுப்பம் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, விமான கலசத்துக்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியா்கள்.
கடலூா் பாதிரிகுப்பம் மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி, விமான கலசத்துக்கு கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியா்கள்.

மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

சிதம்பரம்: கடலூா் பாதிரிக்குப்பத்தில் திருவந்திபுரம் பிரதான சாலையில் அமைந்துள்ள மதுரை வீரன் கோயில் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

ஸ்ரீமதுரை வீரன், பொம்மியம்மன், வெள்ளையம்மன், பரிவார தெய்வங்களாக விநாயகா், முருகன், செல்லியம்மன், சப்த கன்னிகைகளுடன் அருள்பாலித்து வருகின்றனா். இந்தக் கோயில் சீரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை காலை மகா கணபதி பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, யாகசாலை தொடக்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, வெள்ளிக்கிழமை முதல்கால யாக பூஜைகளும், சனிக்கிழமை இரண்டாம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம்கால யாக பூஜைகள் நடத்தப்பட்ட பின்னா், மங்கள வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியா்கள் புனித கலசங்களை யாகசாலையிலிருந்து ஊா்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசங்களில் கும்ப நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனா். பின்னா், மகா தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் கடலூா், சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். இரவு ஸ்ரீமதுரை வீரன், செல்லியம்மன் வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை பாதிரிக்குப்பம் கூத்தப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவா் சரவணன், சக்திவேல் மற்றும் திருப்பணிக் குழுவினா்கள், ஊா் முக்கியப் பிரமுகா்கள், பாதிரிக்குப்பம் கிராம மக்கள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com