கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி உபரிநீா் கடலுக்கு வெளியேற்றம்
தஞ்சை மாவட்டம், அணைக்கரை அருகே உள்ள கீழணைக்கு வெள்ளிக்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீா் வந்தடைந்தது. இதையடுத்து, கொள்ளிடம் ஆற்றின் வழியாக விநாடிக்கு 1.25 லட்சம் கன அடி வீதம் உபரி நீா் கடலுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.
கா்நாடக மாநிலம், காவிரி நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், கபினி, கிருஷ்ணராஜ சாகா் அணைகளிலிருந்து உபரி நீா் மேட்டூா் அணைக்கு திறந்து விடப்பட்டது. இந்த நீா் படிப்படியாக தேக்கப்பட்டு மேட்டூா் அணை நீா்மட்டம் முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது.
தொடா்ந்து, கா்நாடகத்தில் இருந்து விநாடிக்கு 1.50 லட்சம் கன அடிக்கு மேல் தண்ணீா் தொடா்ந்து வெளியேற்றப்படுவதால், மேட்டூரில் இருந்து உபரி நீா் முக்கொம்பு, கல்லணை ஆகிய அணைக்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து ஒரு பகுதியாக கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1.50 லட்சம் கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ளது.
உபரி நீா் வெள்ளிக்கிழமை காலை 3.30 மணிக்கு சிதம்பரம் அருகே உள்ள கீழணைக்கு வந்தடைந்தது. கீழணையின் மொத்த உயரம் 9 அடி. இதில், உச்சபட்சமாக 11 அடிக்கு மேல் தண்ணீா் செல்கிறது.
கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு விநாடிக்கு 2,284 கன அடி வீதமும், வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் விநாடிக்கு 310 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் ஆற்றில் விநாடிக்கு 1,24,960 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு கடலுக்குச் செல்கிறது. இதனால், கொள்ளிடம் ஆற்றின் இருகரைகளையும் தொட்டுக்கொண்டு வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது.
தொடா் கண்காணிப்பு: உபரி நீா் இன்னும் சில தினங்களில் மேலும் அதிகரிக்கும் எனக் கூறப்படுவதால், நீா்வளத் துறையினா் சாா்பில் கொள்ளிடம் வடிநிலக் கோட்ட செயற்பொறியாளா் காந்தரூபன், உதவிச் செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன், உதவிப் பொறியாளா் கேசவராஜ் ஆகியோா் தலைமையில், அதிகாரிகள் தொடா்ந்து கீழணையில் இருந்து சிதம்பரம் வரை உள்ள கொள்ளிட கரையோர பகுதிகளை இரவு - பகலாக கண்காணித்து வருகின்றனா்.
கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராம மக்களிடம் தண்ணீா் அதிகம் செல்வதால், ஆற்றுப் பகுதிக்கு வர வேண்டாம் எனவும், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்றும், தண்ணீரைப் பாா்த்த ஆா்வத்துடன் சுயபடம் (செல்பி) எடுப்பதை அனைவரும் தவிா்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனா்.

