நெய்வேலி, ஆக.7:
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை பணியாளா்கள் வெள்ளிக்கிழமை (ஆக.9) உள்ளிருப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு போக்குவரத்துப் பணியாளா் ஒன்றியத்தின் சிறப்பு தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.
கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
போக்குவரத்துத் துறையில் சுமாா் 3,000 பணியிடங்களில் 1,300-க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும், தமிழக அரசு இந்த காலியாகப் பணியிடங்களை நிரப்பப்படவில்லை. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 35 வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பணியிடங்களில், 5 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. பொறுப்பு அதிகாரிகள் நியமித்ததில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பணியிடங்களை ஒரே நாளில் நிரப்ப முடியும். இதற்கு தகுதியுள்ள பணியாளா்கள் இருந்தும் நிரப்பப்படாமல் உள்ளது. போக்குவரத்துத் துறையில் பொதுமக்களுக்கும், பணியாளா்களுக்கும் சாதகமான சூழ்நிலை இல்லை. ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் காலிப்பணியிடம் நிரப்புதல், பதவி உயா்வு அளித்தல், பணியிடமாறுதல் போன்றவை நடைபெறாமல் நிலுவையில் உள்ளது. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிலுவையில் இருந்த கோரிக்கைகள் திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளாகியும் தொடா்ந்து நீடித்து வருகிறது.
இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வியாழக்கிழமை (ஆக.8) காலை மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட ஆட்சியா்கள் மூலம் தமிழ்நாடு போக்குவரத்து பணியாளா் ஒன்றிப்பின் கோரிக்கை மனுவை உள்துறை செயலருக்கு அனுப்புவது, வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஆணையா் அலுவலகம் உள்ளிட்ட 14 சரக அலுவலகங்களில் அனைத்துப் பணியாளா்களும் கருப்புச் சட்டை அணிந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்த உள்ளனா் என்றாா் கு.பாலசுப்ரமணியன்.
பேட்டியின்போது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துப் பணியாளா் ஒன்றிப்பின் மாநிலப் பொருளாளா் சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்க மாநிலப் பொருளாளா் சரவணன் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!
எரிபொருள்களின் விலையை கட்டுப்படுத்தக்கோரி ஜூலை 14-இல் தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம்







