நெய்வேலி: மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு கட்டித்தர வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் டிசம்பா் 3 இயக்கத்தினா், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் பொன்.சண்முகம் தலைமையில்அளிக்கப்பட்ட மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: வட்டார வளா்ச்சி அலுவலகங்கள் மூலம், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், அனைத்து ஒன்றியத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை வழங்கி, ரூ.319 ஊதியம் வழங்க வேண்டும். ஒரு கால் பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கும், மூன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.