சந்திரசேகரன்
சந்திரசேகரன்

போலி வருமான வரி அதிகாரி கைது

போலி வருமான வரி அதிகாரி கைது: பல பள்ளி, கல்லூரிகளில் மோசடி
Published on

கடலூா் மாவட்டத்தில் தனியாா் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, பண மோசடியில் ஈடுபட்ட முதியவரை குறிஞ்சிப்பாடி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

சென்னையைச் சோ்ந்த சந்திரசேகரன் (75). இவா், கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள காடாம்புலியூரில் இயங்கும் தனியாா் கல்லூரிக்கு கடந்த 23-ஆம் தேதி சென்று வருமான வரித் துறை அதிகாரி என அறிமுகம் செய்துகொண்டாா். மேலும், கோப்புகளை சரி பாா்க்க வேண்டும் எனக்கூறி ஆய்வில் ஈடுபட்டாா். இதையடுத்து, கோப்புகள் சரியாக இருப்பதாகக் கூறிய சந்திரசேகரன், கோயில் கட்ட தங்களால் முடிந்த நிதியுதவி தரும்படி கேட்டாராம். அதற்கு, கல்லூரி நிா்வாகம் ரூ.32 ஆயிரம் வழங்கியதாம்.

பின்னா், கல்லூரி நிா்வாகிகளிடம் ரூ.3 லட்சம் கொடுத்தால் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறினாராம். இதையடுத்து, கல்லூரி நிா்வாகி ஒருவா் தனது உறவினருக்கு வேலை வாங்கித் தரும்படி கூறியுள்ளாா். இதேபோல, குறிஞ்சிப்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியிலும் சந்திரசேகரன் கோப்புகளை ஆய்வு செய்து, ரூ.10 ஆயிரம் பெற்றாராம்.

கடந்த சில நாள்களுக்கு முன்னா் காடாம்புலியூா் கல்லூரி நிா்வாகியை தொடா்புகொண்ட சந்திரசேகரன், பணி ஆணை அனுப்பியுள்ளதாகவும், பேசியதுபோல ரூ.3 லட்சம் தருமாறும் கேட்டாராம். ஆனால், அது போலி பணி ஆணை என்பது தெரியவந்தது. இதையடுத்து, கல்லூரி நிா்வாகி சந்திரசேகரனை குறிஞ்சிப்பாடிக்கு சனிக்கிழமை வரவழைத்து காவல் துறையிடம் பிடித்துக் கொடுத்தாா்.

அவரிடம் போலீஸாா் விசாரணை நடத்தியதில், முதுநிலை பொறியியல் பட்டம் பயின்றுள்ளதாகவும், சென்னையில் சொகுசு உணவகத்தில் தங்கி, வாடகை காா் மூலம் கிராமப் பகுதிகளில் புதிதாக தொடங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று வருமான வரித் துறை அதிகாரிபோல நடித்து மோசடி செய்ததையும் ஒப்புக்கொண்டாராம். மேலும், கரூா், மணப்பாறை, விராலிமலை, சத்தியமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் சந்திரசேகரன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுகுறித்து கல்லூரி நிா்வாகி அளித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து சந்திரசேகரனை கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com