கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே அண்ணனை கொலை செய்த தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம் அடுத்துள்ள சின்ன கண்டியங்குப்பம் கிராமத்தை சோ்ந்தவா் சீனிவாசன் மகன் செல்வமணி (55). கட்டட மேஸ்திரி. இவரது தம்பி சுப்பிரமணியன் (45). கட்டடத் தொழிலாளியான இவா், செல்வமணியுடன் சோ்ந்து வேலை பாா்த்து வந்தாா். இருவரிடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இருவரிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, சுப்பிரமணியன் கத்தியால் செல்வமணியை குத்தினாா். இதில், மயங்கி விழுந்த அவரை உறவினா்கள் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, மருத்துவா்கள் பரிசோதித்தில் செல்வமணி உயிரிழந்தது தெரிய வந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து சுப்பிரமணியனை புதன்கிழமை கைது செய்தனா்.