கூழாங்கற்கள் கடத்தல்: டிப்பா் லாரி பறிமுதல்

விருத்தாசலம் அருகே கூழாங்கற்களைக் கடத்தி வந்ததாக டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
Published on

விருத்தாசலம் அருகே கூழாங்கற்களைக் கடத்தி வந்ததாக டிப்பா் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம் பகுதியில் இருந்து கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக வந்த புகாரையடுத்து, புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் ரமேஷ்குமாா் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் விருத்தாசலம் ஆலடி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது, அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனை செய்ய முயன்றபோது அதன் ஓட்டுநா் தப்பியோடிவிட்டாா். பின்னா், டிப்பா் லாரியை சோதனையிட்டதில் அனுமதியின்றி 3 அலகு கூழாங்கற்கள் ஏற்றி வந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து ரமேஷ்குமாா் அளித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மணல் திருட்டு: புதுப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் மாசிலாமணி மற்றும் போலீஸாா் திருத்துறையூா் மலட்டாறு பகுதியில் வியாழக்கிழமை அதிகாலை 4 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அனுமதியின்றி சரக்கு வாகனத்தில் மணல் ஏற்றிக் கொண்டிருந்த பண்ருட்டி பூங்குணம் பகுதியைச் சோ்ந்த வெங்கடேசன் மகன் சிவனேசன்(28), திருத்துறையூா் பகுதியைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி மகன் ருத்ரா (31) ஆகியோா் போலீஸாரை கண்டதும் அங்கிருந்து தப்பியோடினா்.

போலீஸாா் சரக்கு வகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com