அமைச்சரிடம் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளா்கள் மனு
கடலூா் மாவட்டம், நெய்வேலியில் கூட்டுறவுத்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பனிடம் என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளா் சங்க சிறப்புச் செயலா் எம்.சேகா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என்எல்சி நிறுவனத்தில், தமிழ்நாடு கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இன்கோசா்வ் சங்கத்தில் 6,400 போ் உறுப்பினராக உள்ளனா். என்எல்சியில் பணிபுரிந்து வரும் அதிகாரி ஒருவா் சங்கத்தின் மேலாண் இயக்குநராக செயல்பட்டு வருகிறாா். புதிய நிா்வாகிகள் தோ்வானதில் இருந்து கூட்டுறவுச் சங்க ஆண்டு பேரவை நடத்தப்படவில்லை. எந்த சுற்றறிக்கையும் உறுப்பினா்களுக்கு குறித்த காலத்தில் தெரிவிப்பதில்லை. உறுப்பினா்களின் குறைபாடுகள் குறித்து எந்த அமைப்பிலும் பேச முடிவதில்லை.
இதனால், வங்கிப் பிடித்தம் செய்த தொகையின் அசல் மற்றும் அதற்கான வட்டி குறித்த விபரம் உள்ளிட்டவை அளிக்கப்படுவதில்லை. என்எல்சி வீடுகள் ஒதுக்கீடு செய்யும் போது முறைகேடுகள் நடைபெறுகிறது. எஸ்சி., எஸ்டி ஆணையத்தின் உத்தரவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
எனவே, தமிழக அரசு, கூட்டுறவுத்துறை உடனடியாக என்எல்சியால் நியமிக்கப்பட்ட மேலாண் இயக்குநரை திரும்பப் பெற்று, ஒரு தனி அதிகாரி மற்றும் விசாரணைக்குழு நியமிக்க வேண்டும். 2023-2024-ஆம் ஆண்டு அனைத்து தொழிலாளா்களுக்கும் 20 சதவீத போனஸ் வழங்க அமைச்சா் உத்தரவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.