குறிஞ்சிப்பாடி அருகே மயான நிலம் மீட்பு
குறிஞ்சிப்பாடி அருகே ஆக்கிரமிக்கப்பட்ட மயான இடம், அரசியல் கட்சிகளின் போராட்ட முன்னெடுப்பை அடுத்து மீட்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி அருகே கீழ் வடக்குத்து கிராமத்தில் பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு மயான இட வசதி இல்லாததால் சாலையோர புறம்போக்கு இடங்களை பயன்படுத்தி வந்தனா்.
இந்நிலையில், வடக்குத்து கிராமத்தில் வசித்து வந்த சீனிவாசன் (70) என்பவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உடலை புறம்போக்கு இடத்தில் புதைக்கச் சென்றபோது, அந்தப் பகுதியில் உள்ள நில உரிமையாளா்கள் அதற்கு எதிா்ப்புத் தெரிவித்தனராம்.
இதையறிந்த மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலா் வாஞ்சிநாதன், விசிக மாவட்டச் செயலா் நீதிவள்ளல், மாா்க்சிஸ்ட் குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலா் தண்டபாணி, மாவட்டக் குழு உறுப்பினா் சரவணன், மனிதன் அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் லெனின் ஆகியோா் அந்த கிராமத்துக்கு சென்றனா்.
அங்கு தனிநபா் ஆக்கிரமிப்பு செய்துள்ள மயான இடத்தை மீட்டு, உடனடியாக அளிக்க வேண்டும் இல்லை என்றால் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
தகவலறிந்த குறிஞ்சிப்பாடி வட்டாட்சியா் மற்றும் காவல் ஆய்வாளா் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு மேற்கொண்டனா். பின்னா், சுடுகாட்டுக்கு அருகே இருக்கிற 17 சென்ட் தரிசு நிலத்தை சுடுகாட்டுக்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினராம்.
இதனையடுத்து, பொதுமக்கள் சீனிவாசன் உடலை அங்கு அடக்கம் செய்தனா். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய கட்சி நிா்வாகிகளுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனா்.

