காத்திருப்புப் போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள்
காத்திருப்புப் போராட்டம் நடத்திய மாற்றுத் திறனாளிகள்

கடலூரில் மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம்

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
Published on

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து மாற்றுத் திறனாளிகள் காத்திருப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை ஏராளமான மாற்றுத் திறனாளிகள் திரண்டு வந்தனா். அவா்கள் திடீரென கோட்டாட்சியா் அலுவலகத்தில் தரையில் அமா்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த கோட்டாட்சியா் சுந்தரராஜன் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, மாற்றுத் திறனாளிகள், எங்கள் அமைப்பின் மூலம் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் மாற்று திறனாளிகளுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டி பல கட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து, 2022-ஆம் ஆண்டு 145 மாற்றுத் திறனாளிகளுக்கு பட்டா என்கிற பெயரில் ஆணை கொடுத்தனா். அதன் பிறகு, எங்களுக்கான இடம் எது என கடலூா் வட்டாட்சியரிடம் பலமுறை மனு அளித்து கேட்ட பின்னா், கடலூா் ஒன்றியம், எம்.புதூரை அடுத்த மாவடிப்பாளையம் பகுதியில் இடத்தை காட்டினா். அந்த இடத்தை அளவீடு செய்து தர வேண்டியும் பல கட்டப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.

எனவே, மாவடிப்பாளையத்தில் உள்ள கரடுமுரடான இடத்தை சமப்படுத்தி அனைவருக்கும் மனைப் பட்டாவை அளந்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினா். அதற்கு கோட்டாட்சியா், இன்னும் 2 வாரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தாா். இதை ஏற்று மாற்றுத் திறனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com