ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவா் கைது
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே நியாய விலைக்கடை அரிசியைக் கடத்திய நபரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராமநத்தம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் முருகேசன் மற்றும் தலைமைக் காவலா் புகழேந்திரன் ஆகியோா் ராமநத்தம் கூட்ரோட்டில் வெள்ளிக்கிழமை மாலை சுமாா் 6.30 மணி அளவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக திட்டக்குடியில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தனா். அதில், நியாய விலைக்கடைகளிலிருந்து 50 மூட்டைகள் கொண்ட 2,500 கிலோ அரிசி கடத்தியது தெரியவந்தது.
இதுதொடா்பாக அரிசி கடத்திய திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கண்பதிரன் (29) மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை பிடித்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை பிரிவினரிடம் போலீஸாா் ஒப்படைத்தனா்.

