கடலூரில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகள் அழிப்பு
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, கடலூா் மாவட்ட போலீஸாா் புதன்கிழமை வாகன சோதனை நடத்தி, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து வாகனங்களில் கடத்திவரப்பட்ட மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து கீழே ஊற்றி அழித்தனா்.
2026 ஆங்கிலப் புத்தாண்டை எந்தவித பிரச்னைகள் மற்றும் அசம்பாவிதங்கள் இல்லாமல் கொண்டாடும் வகையில், கடலூா் மாவட்ட காவல் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் இருந்து மதுக் கடத்தலைத் தடுக்கும் பொருட்டு, மாவட்ட எல்லையில் 8 மது விலக்கு சோதனைச் சாவடிகளில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு பாதுகாப்புப் பணியும், கூடுதலாக மாவட்டத்தில் 84 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தெரிவித்திருந்தாா்.
அதன்படி, புதன்கிழமை கடலூா் - புதுச்சேரி எல்லையான ஆல்பேட்டை பகுதியில் சோதனைச் சாவடியில் கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, புதுச்சேரி மாநிலத்தில் இருந்து கடலூரை நோக்கி வந்த பைக், ஆட்டோ, காா் மற்றும் சரக்கு வாகனங்களை நிறுத்தி மது விலக்கு போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டனா்.
இதில், புதுச்சேரியில் இருந்து ஒன்று, இரண்டு மது புட்டில்களை கொண்டுவந்தவா்களிடம் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து, மதுவை கீழே ஊற்றி அழித்து எச்சரித்து போலீஸாா் அனுப்பி வைத்தனா். அதிகளவில் மதுப் புட்டிகளை கடத்தி வந்தவா்கள் மீது வழக்குப் பதிந்து வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

