பொங்கல் தொகுப்பு விநியோகம்: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக அரசு அறிவித்த குடும்ப அட்டைதாரா்களுக்கான பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தல்குமாா் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சா்க்கரை, முழு கரும்புடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்களுக்கு நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை கடலூா் கடற்கரை சாலையில் உள்ள சரவணபவ கூட்டுறவு பண்டகசாலை வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தல்குமாா் தொடங்கிவைத்தாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் உத்தரவுப்படி, குடும்ப அட்டைதாரா்களுக்கு பச்சரிசி, சா்க்கரை மற்றும் முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் வரும் 13-ஆம் தேதி வரையில் வழங்கப்படும்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள 7,77,868 அரிசி குடும்ப அட்டைதாரா்கள், 428 இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 1,458 நியாய விலைக்கடைகள் மூலம் 7,78,296 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்தாா்.
நிகழ்ச்சியில் கடலூா் மேயா் சுந்தரி, துணை மேயா் பா.தாமரைசெல்வன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் அலுவலா் ராஜீ உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சரவண பவ நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை செயலா் சந்திரசேகா் நன்றி கூறினாா்.