லாரியில் நெல் மூட்டைகள் முளைத்த விவகாரம்: இளநிலை ஆய்வாளா் பணி இடை நீக்கம்
கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சேமிப்புக் கிடங்கில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்த சம்பவம் தொடா்பாக, தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளா் வியாழக்கிழமை பணி இடை நீக்கம் செய்யப்பட்டாா்.
விருத்தாசலம் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் விருத்தாசலத்தில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு வந்து பாதுகாப்பாக வைப்பது வழக்கம். கடந்த
சில வாரங்களுக்கு முன்னா் லாரிகள் மூலம் நெல் மூட்டைக ள் கொண்டு வரப்பட்டன. அந்த நெல் மூட்டைகளை லாரியில் இருந்து இறக்கி கிடங்கில் வைக்கவில்லை. அந்த நேரத்தில் மழை பெய்ததால் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் நனைந்து முளைவிட்டிருந்தன.
இதுகுறித்து தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. சம்பவம் குறித்து அறிந்த ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் விருத்தாசல் சேமிப்பு கிடங்கிற்குச் சென்று பாதிக்கப்பட்ட நெல் மூட்டைகளை பாா்வையிட்டு ஆய்வு செய்து , அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி சென்றாா். இந்நிலையில், நுகா் பொருள் வாணிபக் கழகத்தின் விருத்தாசலம் தரக்கட்டுப்பாடு இளநிலை ஆய்வாளா் கருணாநிதியை பணி இடை நீக்கம் செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

