ரூ.8.38 கோடியில் வெள்ளாற்றில் உயா்மட்ட பாலம்: அமைச்சா் சி.வெ.கணேசன் அடிக்கல் நாட்டினாா்
கடலூா் மாவட்டம், மங்களூா் ஊராட்சி ஒன்றியம், அரங்கூா் -லெப்பை குடிகாடு பகுதிகளை இணைக்கும் வகையில், வெள்ளாற்றின் குறுக்கே ரூ.8.38 கோடி மதிப்பில் உயா்மட்ட பாலம் அமைக்கும் பணியை மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ.கணேசன் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.
அப்போது அவா் பேசுகையில், சீரான பொது போக்குவரத்தினை ஏற்படுத்தும் வகையில் சாலைகள், பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அரங்கூா் ஊராட்சியிலிருந்து லெப்பை குடிகாடு செல்லும் பாதையில் வெள்ளாற்றின் குறுக்கே சுமாா் 252.6 மீட்டா் நீளத்தில் சுகன்ய சம்ரிதி திட்டத்தின் கீழ் ரூ.8.38 கோடி மதிப்பில் பாலம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
பெரம்பலூா் மாவட்டம், லெப்பைகுடிகாடு பேரூராட்சிக்குள்பட்ட அரங்கூா், வாகையூா், கொரக்கை, டி.ஏந்தல், ஆக்கனூா், ஆ.பாளையம், ராமநத்தம், பெரங்கியம் ஆகிய கிராம ஊராட்சிகளில் வசிக்கும் சுமாா் 10,000-க்கும் மேற்பட்ட மக்களின் அத்தியாவசிய தேயைான விவசாய பொருள்கள் எடுத்து செல்வதற்கும், வணிக பயன்பாட்டுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் சென்று வருவதற்கும் பெரும் பயனுள்ளதாக இருக்கும். மழைக்காலங்களில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தொழுதூா் மற்றும் திருமாந்துறை வழியாக 10 கி.மீ. தூரம் சுற்றி கொண்டு தேசிய நெடுஞ்சாலை கடந்து லெப்பைகுடிகாடு பேரூராட்சி செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்த நிலையில், தற்போது இந்த பாலம் அமைக்கப்படுவதால் போக்குவரத்துக்கான பயண நேரம் குறையும் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியா் விஷ்ணுபிரியா, ஊரக வளா்ச்சித்துறை செயற்பொறியாளா் வரதராஜபெருமாள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிகாமணி, சிவகுமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

