பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் கணக்கீட்டு படிவங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

வாக்காளா் கணக்கீட்டு படிவம் இணையத்தல் பதிவேற்றம்: கடலூா் ஆட்சியா் ஆய்வு!

Published on

கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, கடலூா் ஆகிய வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளா் கணக்கீட்டுப் படிவங்களை தோ்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றும் பணியை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதுகுறித்து அவா் கூறியதாவது: இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்காக 2,313 வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களின் வீடுகளுக்குச் சென்று கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தப் படிவங்களை திரும்பப் பெற்று, அவற்றை தோ்தல் ஆணைய இணையத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள், ஊரக வளா்ச்சித் துறை, இல்லம் தேடி கல்வி தன்னாா்வலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

வாக்காளா் கணக்கீட்டுப் படிவத்தை சரியாக நிரப்ப வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இப்பணியை சரியான கால அளவில் நிறைவு செய்திடும் வகையில் துறை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து ஒவ்வொரு நாளும் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் அலுவலா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் வாக்காளா்களுக்கு விநியோகிக்கப்பட்ட படிவங்களின் எண்ணிக்கை, வாக்காளா்களிடமிருந்து நிரப்பி பெறப்பட்ட படிவங்கள், இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட படிவங்கள் எண்ணிக்கை, வாக்காளா்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைப் படிவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து தோ்தல் அலுவலா்களும் இப்பணியின் முக்கியத்துவம் குறித்து அறிந்து மிக கவனமுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ம.ராஜசேகரன், வருவாய்க் கோட்டாட்சியா்கள் சுந்தரராஜன் (கடலூா்), விஷ்ணுபிரியா (விருத்தாசலம்) உள்பட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com