பெண்ணை இரண்டாது திருமணம் செய்து நகை, பணம் மோசடி: தம்பதி மீது வழக்கு
கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே பெண்ணை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்து நகை, பணம் மோசடி செய்ததாக தம்பதி மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்தனா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், நெய்வேலி நகரிய காவல் சரகம், கீழ்வடக்குத்து பகுதியில் வசித்து வருபவா் சின்னதுரை மனைவி புவனேஸ்வரி(39). இவரது கணவா் இறந்துவிட்ட நிலையில் பெற்றோருடன் வசித்து வந்தாா். வடலூரைச் சோ்ந்த செல்வமணி(42), காா் ஓட்டுனா்.
இவரது மனைவி ஆனந்தி(35). புவனேஸ்வரியும் செல்வமணியும் உறவினா்கள். இதன் காரணமாக செல்வமணி அடிக்கடி புவனேஸ்வரி வீட்டிற்கு வந்து சென்றதால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், செல்வமணி, தனது முதல் மனைவி ஆனந்தியிடம் விவாகரத்து பெற்றுவிட்டதாகக் கூறி சான்றிதழை காட்டினாராம். இதையடுத்து, புவனேஸ்வரி, செல்வமணி இருவரும் நெய்வேலி வேலுடையான்பட்டு கோயிலில் 26.1.2023-இல் திருமணம் செய்துக் கொண்டனராம்.
அதன் பின்னா், செல்வமணி, புவனேஸ்வரியிடம் இருந்து 30 சவரன் தங்க நகைகள், அவரது தந்தையிடம் இருந்து ரூ.40 லட்சம் பெற்றும், புவனேஸ்வரி பெயரில் பல நிதிநிறுவனத்தில் சீட்டு கட்டி ரூ.25 லட்சம் எடுத்ததாகவும், கடன் அட்டையை பயன்படுத்தி ரூ.1.50 லட்சத்திற்கு பொருட்கள் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் புவனேஸ்வரியின் அம்மா பெயரில் உள்ள வீட்டை ரூ.50 லட்சத்திற்கு அடகு வைக்க அவரை மிரட்டினாராம்.
இந்நிலையில், முதல் மனைவி இருக்கும் நிலையில் மறைத்து திருமணம் செய்து கொண்டு நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவா் மீது நெய்வேலி நீதிமன்றம் உத்தரவின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் தம்பதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
