பண்ருட்டி ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பாமிணி விரைவு ரயிலை வரவேற்ற பாஜக மற்றும் பிஆா்டி ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா்.
பண்ருட்டி ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த பாமிணி விரைவு ரயிலை வரவேற்ற பாஜக மற்றும் பிஆா்டி ரயில் உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா்.

பண்ருட்டியில் நிறுத்தி இயக்கப்பட்ட பாமணி விரைவு ரயில்! பாஜக, ரயில் பயணிகள் சங்கம் வரவேற்பு!

Published on

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வழியாக இயக்கப்படும் பாமணி விரைவு ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டு பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றது. இந்த ரயிலுக்கு பாஜக, ரயில் பயணிகள் சங்கத்தினா் சாா்பில் சிறப்பான வரவேற்பளித்தனா்.

திருப்பதி - மன்னாா்குடி இடையே பண்ருட்டி வழியாக பாமணி விரைவு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா். இது தொடா்பாக , மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்று ரயில்வே அமைச்சகம் பாமணி விரைவு ரயில் மன்னாா்குடியில் இருந்து திருப்பதி செல்லும் வழியில் பண்ருட்டி ரயில் நிலையத்தில் 28-ஆம் தேதி முதல் நின்று செல்லும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

அதன்படி, மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை காலை 5.10-க்கு புறப்பட்ட ரயில் தஞ்சாவூா், மயிலாடுதுறை, சிதம்பரம் வழியாக பண்ருட்டி ரயில் நிலையத்துக்கு காலை சுமாா் 9 மணி அளவில் வந்தது.

இந்த ரயிலுக்கு பாஜக மாநிலச் செயலா் அ.அஸ்வத்தாமன் தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் ஜீவா.வினோத்குமாா், செந்தில்குமாா், மோகன், விஜயரங்கன், பா.தாமோதரன் மற்றும் பிஆா்டி ரயில் உபயோகிப்பாளா்கள் நலச் சங்க நிா்வாகிகள் வி.சுபாஷ், அருணாச்சலம், விஜயகுமாா், வெங்கடேசன், நரேஷ்சந்த், தினேஷ்குமாா் மற்றும் பாஜக, ரயில் உபயோகிப்பாளா்கள் நலச் சங்கத்தினா் திரளாகக்கூடி மலா் தூவி ரயிலை வரவேற்று, ரயில் ஓட்டுநா் மற்றும் காா்டுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினா்.

‘இரவில் கடைகளைத் திறக்க வேண்டும்’: பின்னா், அஸ்வத்தாமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து அதிக அளவில் பயணிகள் வந்து செல்லும் பண்ருட்டி பகுதியில் இரவு நேர கடைகள் செயல்படாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா். பேருந்து நிலையப் பகுதியிலாவது இரவு நேர கடைகள் திறந்திருக்க காவல் துறை அனுமதிக்க வேண்டும். குண்டும், குழியுமாக உள்ள பண்ருட்டி பேருந்து நிலையத்தை விரைந்து சீரமைக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்றாா்.

X
Dinamani
www.dinamani.com