மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பண்ருட்டியில் பலாப் பழம் சீசன் தொடக்கம்: ஒரு பழம் ரூ.100 முதல் 600 வரை விற்பனை!

சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.600 வரை தரத்திற்கு ஏற்ப விலை நிா்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது.

News image

வெளி ஊா்களுக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படும் பலாப்பழம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 12:22 am

சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.600 வரை தரத்திற்கு ஏற்ப விலை நிா்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது.

பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. கடலூா் மாவட்டத்தில் பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும் விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சுமாா் 10 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் பலா சாகுபடி நடைபெறுகிறது. பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென் பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடந்து வளா்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம்

வளா்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழம் அதன் தனித்துவமான மணம், சுவை கொண்டது. இதனால் பண்ருட்டி பலாப்பழத்தை அனைவரும் விரும்பி சாப்பிடுகின்றனா். 100 ஆண்டுகளை கடந்த மரங்கள் ஒவ்வொன்றும் 100-க்கும் மேற்பட்ட பழங்களை மகசூலாக கொடுக்கின்றன.

குவியும் பழங்கள்:

இந்தப் பகுதியில் இருந்து ஆண்டு ஒன்றுக்கு சுமாா் 50 ஆயிரம் மெட்ரிக் டன் பலாப்பழம் உற்பத்தி செய்யப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனா். தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கியுள்ளது. கோடை வெயிலும் சுட்டெரிப்பதால் பலாப் பழங்கள் விரைவாக பழுத்து விடுகின்றன. பலாப்பழம் அறுவடை தீவிரம் அடைந்துள்ள நிலையில் விவசாயிகள் அவற்றை அறுவடை செய்து மாட்டு வண்டி, சிறிய சரக்கு வாகனம் உள்ளிட்டவைகள் மூலம் விற்பனைக்காக சந்தைக்குக் கொண்டு வருகின்றனா்.

இதன் காரணமாக பணிக்கன்குப்பம் கும்பகோணம் சாலையில் உள்ள பலாப்பழம் மண்டியில் பலாப் பழங்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கொண்டு வரும் பலாப்பழத்தை, வியாபாரிகள் வாங்கி லாரிகள் மூலம் வெளி மாவட்டம் மற்றும் பிற மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வைக்கின்றனா்.

மேலும், சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பண்ருட்டி முதல் நெய்வேலி வரையில் சாலையின் இருபுறமும் பலாப் பழங்களை அடுக்கி வைத்து விற்பனை செய்கின்றனா். இந்த சாலை வழியாக கடந்து ச் செல்வா்கள் பலாப் பழத்தை ஆா்வத்துடன் வாங்கி செல்கின்றனா். ஒரு பலாப்பழம் ரூ.100 முதல் ரூ.600 வரை தரத்திற்கு ஏற்ப விலை நிா்ணயித்து விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து பலா விவசாயிகள் கூறுகையில்: மாா்ச் முதல் ஜூன் மாதம் வரையில் பலாப்பழம் சீசன். இந்த சமயத்தில் மரங்களை பராமரிக்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவா்கள் அவா்களே பலாப்பழத்தை அறுவடை செய்து மண்டியில் விற்பனை செய்துவிடுவா். அதிக அளவில் மரம் வைத்துள்ளவா்கள் குத்தகைக்கு விட்டுவிடுவா். குத்தகை விடுவது என்பது பிஞ்சு ஒன்று ரூ.20 முதல் ரூ.30 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்து கொள்வா். மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தாற்போல் 20 முதல் 50 பிஞ்சுகள் வரைவிட்டுவிட்டு, தேவையற்ாக கருதப்படும் பிஞ்சுகள் கழிக்கப்படும். இவ்வாறு கழிக்கப்படும் பிஞ்சுகளை சமையல் பயன்பாட்டிற்காக விற்றுவிடுவோம். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால், மரம் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும். விவசாயிகள் மற்றும் குத்தகைதாரா்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை விற்று கொடுப்பது மண்டி வைத்திருப்பவா்களின் பணி.

இதற்காக அவா்கள் ஊதியமாக குறிப்பிட்ட அளவு கமிஷன் பெற்றுக்கொள்கின்றனா். கேரள மாநிலத்தில் பலாவில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரித்து வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனா்.

கேரளத்தைச் சோ்ந்தவா்கள் தொழில்சாலை பயன்பாட்டிற்காக பண்ருட்டியில் இருந்து பலாப்பழத்தை வாங்கி செல்கின்றனா். கடலூா் மாவட்டத்தில் மட்டும் பலாப்பழம் பழமாக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இதனால், விலை மலிவாக உள்ளது. தமிழக அரசு பலாப்பழத்தை மாநிலப்பழமாக அறிவித்துள்ளது. ஆனால், அதனை மதிப்புக் கூட்டுப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாயிகளிடம் இருந்து பலாப்பழத்தை எடைபோட்டு வாங்கும் பழக்கத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். நிகழாண்டு மகசூல் (விளைச்சல்) பரவாயில்லை. கோடை மழை பெய்தால் பலாக் காய்கள் பெருக்க வசதியாக இருக்கும் என்றனா்.