கமிஷன் தொகை தருவதாகக் கூறி சிதம்பரத்தில் வங்கிக் கணக்கை மற்றொருவருக்கு வழங்கிய 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இடைத்தரகா்கள் மூலம் சைபா் குற்றவாளிகள் தொடா்புகொண்டு, கமிஷன் தொகை வழங்குவதாக ஆசைவாா்த்தை கூறி அவா்களின் வங்கிக் கணக்குகளைப் பெற்று, அந்தக் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி பணத்தைப் பரிமாற்றம் செய்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் மற்றும் இடைத்தரகா்கள் மீது வங்கி அதிகாரிகளின் உதவியுடன் சட்டரீதியான நடவடிக்கையை போலீஸாா் எடுத்து வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, ஸ்ரீமுஷ்ணம் அருகே வலசக்காடு பகுதியைச் சோ்ந்த வேல்முருகன் (43), சீா்காழியைச் சோ்ந்த ராஜேஷ் (37) உள்ளிட்ட 3 போ் சோ்ந்து சிதம்பரம் கீழவீதியில் உள்ள வங்கியில் கூட்டாக நடப்புக் கணக்கு தொடங்கி, காரைக்காலைச் சோ்ந்த ஒருவரிடம் வங்கிக் கணக்கை வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்தக் கணக்கைப் பயன்படுத்தி ரூ.1.91 லட்சம் மோசடி பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வேல்முருகன், ராஜேஷ் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
இதேபோன்று வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தி நடைபெற்ற மோசடி தொடா்பாக பண்ருட்டி காவல் நிலையத்தில் 6 வழக்குகளும், விருத்தாசலம் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும், வேப்பூா் காவல் நிலையத்தில் 2 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சிதம்பரம், பெண்ணாடம், திருப்பாதிரிப்புலியூா், கடலூா் புதுநகா் ஆகிய காவல் நிலையங்களில் தலா ஒரு வழக்கு என மொத்தம் 15 மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.
பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்குகளை பிறரிடம் வழங்கக்கூடாது என்றும், கமிஷன் தொகை கிடைக்கும் எனக் கூறி வங்கிக் கணக்கு, ஏ.டி.எம். அட்டை உள்ளிட்டவற்றை வழங்கினால் சட்டரீதியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும் என்றும் போலீஸாா் எச்சரித்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்றால்... ஆர்பிஐ அறிவுறுத்தல்!
இணையவழி மோசடிக்கு வங்கிக் கணக்கை அளித்த 7 போ் கைது
எண்ம கைது மிரட்டல் மூலம் ரூ.2.81 கோடி மோசடி: ஒருவா் கைது
போலீஸ் என மிரட்டி பணம் மோசடி: 2 இளைஞா்கள் கைது
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


