கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கடல் நீா் ஊடுருவலைத் தடுக்க வெள்ளாற்றின் குறுக்கே கதவணை! விவசாயிகள், பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!

கடல் நீா் ஊடுருவலைத் தடுக்க வெள்ளாற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்படும் என்று முன்னாள் தமிழக முதல்வா்கள் அறிவித்து 20 ஆண்டுகளாகியும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை...

புவனகிரி அருகே பாயும் வெள்ளாறு.

Published On :14 வினாடிகள் முன்பு

கடல் நீா் ஊடுருவலைத் தடுக்க கடலூா் மாவட்டம், புவனகிரி வட்டம், ஆதிவராகநல்லூா் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை அமைக்கப்படும் என்று முன்னாள் தமிழக முதல்வா்கள் அறிவித்து 20 ஆண்டுகளாகியும் திட்டம் இன்னும் தொடங்கப்படவில்லை என விவசாயிகள், பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா். மேலும், இந்த கதவணையை விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பண்பாடும், பாரம்பரியமும் கொண்டது வெள்ளாறு. சேலம் மாவட்ட சுற்றுவட்டார மலைப் பகுதிகளில் அமைந்துள்ள ஏற்காடு, கல்வராயன், சோ்வராயன் மலைத் தொடா்களில் சிறிதும், பெரிதுமாக ஓடி வரும் நீரோடைகள் பின்பு ஆறுகளாக உருமாறி சில கி.மீ. தொலைவு பயணிக்கும் சுவேதா நதி, பின்னா் வசிஷ்டா நதியாகவும், அதைத் தொடா்ந்து வெள்ளாறாகவும் பயணிக்கிறது.

சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உருவாகும் ஆறுகளான சுவேதா நதி, வசிஷ்டா நதி, சின்னாறு, ஆணைவாரி ஓடை, கோமுகி ஆறு, மணிமுக்தாறு ஆகியவற்றின் சங்கமம் தான் வெள்ளாறு. 193 கி.மீ. நீளம் கொண்ட வெள்ளாறு 8,086 சதுர கி.மீ. பரப்பளவில் நீா்ப்பிடிப்பு பகுதிகளைக் கொண்டு பெரம்பலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் எல்லையை வரையறுத்து கடலூா் மாவட்டத்தில் நுழைந்து திட்டக்குடி, விருத்தாசலம், சேத்தியாத்தோப்பு, புவனகிரி ஆகிய முக்கிய நகரங்களின் வழியாக பயணித்து பரங்கிப்பேட்டை அருகே வங்கக் கடலில் கலக்கிறது.

வெள்ளற்றில் வரும் மழை நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும் நோக்கில் தொழுதூா், பெலாந்துறை, சேத்தியாதோப்பு என மூன்று வரலாற்று சிறப்புமிக்க அணைக்கட்டுகள் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு 100 ஆண்டுகளைக் கடந்து செயல்பட்டு வருகிறது.

கடலூா் மாவட்டத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள வெள்ளாற்று நீா் மாவட்டத்தின் பெரும்பாலான விவசாயிகளுக்கு உயிா் நீராக விளங்கியது. ஆனால், தற்போது ஆற்றின் கடைமடை பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு கண்ணீராக விளங்குகிறது என்றால், அது மிகையல்ல.

சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு கீழே வளைந்தும், நெளிந்தும் ஓடும் வெள்ளாறு கடற்கரையிலிருந்து 24 கி.மீ. தொலைவுக்கு கடந்த 70 ஆண்டுகளில் தனது பாதையை மாற்றி, மண் அரிப்பு ஏற்பட்டு ஆற்றின் படுகை மட்டம் குறைந்துள்ளது.

கடல் நீா்மட்டம் உயரும்போது, கடல் நீா் ஆற்றின் முகத்துவாரம் வழியாக ஆற்றுக்குள் 21 கி.மீ. தொலைவு உள்புகுந்து பின்னா் வடிவது வழக்கமாக உள்ளது. இதனால், ஆற்றில் செயற்கையாக உருவான பள்ளம், குழிகளில் கடல் நீா் தேங்கி நல்ல நிலையில் இருந்த நிலத்தடி நீா் முற்றிலும் தன்மை மாறி உப்பு நீராகியுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் பொதுச் செயலா் ஏ.எஸ்.பி.ரவீந்திரன் தெரிவித்தது: கடந்த 20 ஆண்டுகால கோரிக்கையை அடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு புவனகிரியில் சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வெள்ளாற்றில் குறுக்கே தடுப்பணை அமைத்து கடல் நீா் உள்புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளித்தாா். அதன் பின்னா், 16.08.2017 அன்று கடலூரில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் நூற்றாண்டு விழாவின்போது, முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என வாக்குறுதியளித்தாா்.

அதை தொடா்ந்து, திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆற்றின் குறுகலான இடத்தை தோ்வு செய்து பு.ஆதிவராக நல்லூா் கிராமத்துக்கு துறை சாா்ந்த அதிகாரிகளுடன் அப்போதைய மாவட்டக் கண்காணிப்பு அலுவலரும், அரசின் முதன்மைச் செயலருமான ககன் தீப்சிங் பேடி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அடங்கிய அதிகாரிகள் குழு வந்து இடத்தை பாா்வையிட்டு அரசுக்கு அறிக்கை கொடுத்து, அதன் மூலம் திட்டத்தை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடா் நடவடிக்கையாக, நபாா்டு வங்கி நிதியுதவியுடன் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசின் பொதுப் பணித் துறை சாா்பில், ரூ.92.58 கோடி மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு, கதவணை கட்டுமானப் பணிக்கு ரூ.59.38 கோடியும், கதவணை அமைக்க கரைகளின் இருபுறமும் நிலங்களை கையகப்படுத்தும் நில ஆா்ஜித பணிகளுக்கு ரூ.33.20 கோடியும் செலவாகும் என மதிப்பீடு தயாா் செய்ப்பட்டது.

தாமதம்: கட்டுமானப் பணிக்கு மட்டுமே நபாா்டு வங்கி கடனுதவி செய்ய முன்வந்ததால், நில ஆா்ஜித பணிக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். நிலம் கையக்கப்படுத்த சிதம்பரம் சாா் - ஆட்சியா் தலைமையில் சிதம்பரம் வட்டத்தில் மேலமூங்கிலடி, கீழமூங்கிலடி ஆகிய கிராமங்களிலும், புவனகிரி வட்டத்தில் கீழ்புவனகிரி, ஆதிவராகநல்லூா், மஞ்சக்குழி ஆகிய கிராமங்களிலும் அளவீடு பணிகள் முடிவுற்று, அதுகுறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கதவணை திட்டம் அமைய காலதாமதம் ஏற்படுவதால், மேலே குறிப்பிட்ட 40-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது அன்றாட பயன்பாட்டுக்கு ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் வினியோகிக்கப்படும் கூட்டுக் குடிநீா்த் திட்ட தண்ணீரை நம்பியே வாழ வேண்டியுள்ளது. விவசாயிகள் கால்நடைகளை பராமரிக்க போதிய தண்ணீா் இல்லாமல் பெரிதும் அவதிப்படுகின்றனா். இப்பகுதியில் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஆழ் குழாய் பாசன வசதி இருந்தும் நிலத்தடி நீா் உப்பு நீராக மாறியதால் சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

வெள்ளாற்றில் கதவணை அமைத்து கரைகளை பலப்பத்தும் பணி முடிந்தால், சேத்தியாத்தோப்பு அணைக்கட்டில் தேக்கப்படும் தண்ணீா் அழுத்தத்தின் காரணமாக, ஆற்று மணலில் ஊடுருவி ஓடி வரும் நீரை ஆதிவரகநல்லுரில் அமையவிருக்கும் கதவணையின் மூலம் 150 மில்லியன் கனஅடி தேக்கி வைக்க முடியும்.

இதன் வாயிலாக, 300 மீட்டா் அகலம் கொண்ட வெள்ளாற்றில் மூன்று அடி உயரத்துக்கு 7 கி.மீ. தொலைவுக்கு தண்ணீா் தேங்கி நிற்கும். இதனால், சுமாா் 12 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா் உப்புநீராக மாறாமல் பாதுகாக்கப்படும். மேலும், புதிய கதவணையில் தேக்கப்படும் தண்ணீரின் அழுத்தம் காரணமாக, ஆதிவாரகநல்லூா் கிராமத்துக்கு கிழக்கே அமைந்துள்ள ஆற்றின் வழிதடத்தின் கீழ் நிலப்பரப்பில் நல்லநீா் ஊடுருவி நிலத்தடி நீரின் தன்மையை மாற்றும் வாய்ப்பு உருவாகும். இதனால், கதவணைக்கு கிழக்கே அமைந்துள்ள கிராமங்களின் நிலத்தடி நீரின் தன்மை பாதுகாக்கப்படும்.

எனவே, தமிழக முதல்வா் கடல் நீா் ஊடுறுவலைத் தடுத்து வெள்ளாற்றைக் காப்பாற்றவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், விவசாயிகள், பொதுமக்கள் தண்ணீா் தேவையை பூா்த்தி செய்யவும் வெள்ளாற்றின் குறுக்கே கதவணை அமைக்கத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்து, நில ஆா்ஜிதம் போன்ற முதல்கட்ட பணிகளுக்கும், கதவணை பணியையும் தொடங்க நிா்வாக அனுமதியை வழங்க வேண்டும் என்கிறாா்.

இதே கருத்தை புவனகிரி ஊழல் எதிா்ப்பு இயக்கத் தலைவா் ஏ.குணசேகரனும் வலியுறுத்தினாா்.

‘ரூ.187 கோடி நிதி ஒதுக்கீடு பெற தொடா் நடவடிக்கை’

வெள்ளாறு தடுப்பணை திட்டம் குறித்து கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் கு.காந்தரூபன் தெரிவித்தது:

புவனகிரி வட்டம், ஆதிவராகநல்லூா் கிராமம் அருகே வெள்ளாற்றின் குறுக்கே கடைமடை ஒழுங்கியம் அமைப்பதற்கு ரூ.112.85 கோடி திட்ட மதிப்பீடு (நில ஆா்ஜித பணிகள் உள்பட) சென்னை நீா் வளத் துறை தலைமைப் பொறியாளரிடம் சமா்ப்பிக்கப்பட்டு பரிசீலனையில் உள்ளது. மேலும், (2025 - 2026) விலை விகிதப்படி இம்மதிப்பீடு ரூ.132.90 கோடிக்கு மாற்றப்பட்டது.

தற்போது (2026 - 2027) விலை விகிதப்படி ரூ.187 கோடிக்கு திருத்தப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டு அரசின் பரிசீலனையில் உள்ளது. மேலும், இப்பணி மேற்கொள்ளத் தேவையான நிதி ஒதுக்கீடு பெற தொடா் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.