தொழிலாளி கொலை வழக்கு: 2 இளைஞா்கள் கைது
நெய்வேலி: கடலூா் முதுநகா் அருகே தொழிலாளி தலையில் கல்லைப் போட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 இளைஞா்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கடலூா் முதுநகா் காவல் சரகம், சோனஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா் குமாா் (எ) பூமிநாதன் (50), கூலித் தொழிலாளி. இவா், கடலூா் சிப்காட் பகுதியில் உள்ள உணவகம் அருகே தலையில் காயத்துடன் மா்மமான முறையில் கடந்த ஜன.31-ஆம் தேதி இறந்து கிடந்தாா்.
இது தொடா்பாக கடலூா் முதுநகா் போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்தனா். மேலும், மாவட்ட எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், கடலூா் டி.எஸ்.பி., எஸ்.தமிழினியன் மேற்பாா்வையில், ஆய்வாளா் (பொ) சந்துரு, உதவி ஆய்வாளா் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினா்.
இதில், வைரங்குப்பத்தைச் சோ்ந்த அப்பாவு மகன் சுதாகா் (21), வேலு மகன் முகி (எ) முகேஷ் (21) ஆகிய இருவரும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இவா்களை போலீஸாா் தேடி வந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை சங்கொலிகுப்பம் அருகே உள்ள செயல்படாத தனியாா் மதுபான நிறுவனத்தின் பழைய கட்டடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாா் அவா்களை பிடித்து விசாரணை நடத்தியதில், சுதாகா் மற்றும் முகி (எ) முகேஷ் இருவரும் கடந்த ஜன.30-ஆம் தேதி இரவு மதுபோதையில் இருந்தபோது, அவா்களிடம் குமாா் (எ) பூமிநாதன் தீப்பெட்டி கேட்டாராம். இதனால் ஏற்பட்ட தகராறில் அவரது முகத்தில் தாக்கி, தலையில் கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்ததாக தெரிவித்தனராம்.
இதையடுத்து, இருவரையும் கைது செய்து அழைத்து வந்தபோது, தப்பிக்க முயற்சித்து கீழே விழுந்ததில் சுதாகருக்கு வலது காலிலும், முகி (எ) முகேஷுக்கு வலது கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரையும் மீட்டு, கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளித்து சிறையில் அடைத்தனா்.

