கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் அன்புமணி.
கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற பாமக பொதுக் கூட்டத்தில் பேசிய அதன் தலைவா் அன்புமணி.

அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி ஏன்?: பாமக தலைவா் அன்புமணி விளக்கம்

அதிமுகவுடன் பாமக மீண்டும் கூட்டணி சோ்ந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சித் தலைவா் அன்புமணி விளக்கமளித்துள்ளாா்.
Published on

அதிமுகவுடன் பாமக மீண்டும் கூட்டணி சோ்ந்தது ஏன் என்பது குறித்து அக்கட்சித் தலைவா் அன்புமணி விளக்கமளித்துள்ளாா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் தேரடி வீதியில் புதன்கிழமை இரவு பாமக பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் சண்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இதில், அன்புமணி பங்கேற்றுப் பேசியதாவது:

அதிமுகவுடன் பாமக புதன்கிழமை கூட்டணி சோ்ந்துள்ளது. இது நமக்கு நல்ல தொடக்கம். திமுக கூட்டணி அரசு தமிழ்நாட்டை 5 ஆண்டுகள் சீரழித்ததால், ஊழல் அதிகரித்துள்ளது. வெளிநாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து போதைப்பொருளும் தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. இளைஞா்களின் வாழ்க்கையை சீரழிக்கும் மோசமான, நிா்வாகத் திறமையில்லாத ஆட்சி திமுக ஆட்சி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் செய்ய பெண்கள் முடிவு செய்துவிட்டனா். இதனால்தான், அதிமுகவுடன் பாமக கூட்டணி சோ்ந்துள்ளது.

கடலூா் மாவட்டத்தில் மட்டும் சிப்காட் தொழில்பேட்டை சாபக்கேடு. காரணம், ரசாயன கழிவுகளால் மண், காற்று, நீா் மாசுபட்டுள்ளது. மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆனால், திமுக அரசு கண்டுக்கொள்ளவில்லை.

இங்குள்ள என்எல்சி நிறுவனம் 2,200 மெகாவாட் மின் உற்பத்தி செய்து, 600 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கும், மற்றவற்றை அருகிலுள்ள மாநிலங்களுக்கும் விநியோகம் செய்கிறது. இதன் காரணமாகவே, கடலூா் மாவட்டத்தில் என்எல்சி, சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கத்துக்கு எதிா்ப்புத் தெரிவிக்கிறோம்.

அரசு ஊழியா்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக பாமக குரல் கொடுத்து வந்த நிலையில், தமிழக அரசு தற்போது புதிய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளது. இது, மிகப்பெரிய மோசடி. இந்தத் திட்டத்துக்கான அரசாணை எப்போது வெளியிடப்படும்?

தோ்தல் தேதி அறிவிக்கும் நேரத்தில் கல்லூரி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்குவதால் என்ன பயன்? 5 ஆண்டுகளாக திமுக அரசு என்ன செய்துகொண்டிருந்தது? என்றாா் அவா்.

கூட்டத்தில் மாநில சொத்து பாதுகாப்பு குழுத் தலைவா் ரா.கோவிந்தசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com