காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வு  எழுத வந்த இளைஞா்கள்
காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வு எழுத வந்த இளைஞா்கள்கோப்புப்படடம்

காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வு இன்று தொடக்கம்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வு, கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரை
Published on

நெய்வேலி: இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல்திறன் தோ்வு, கடலூா் அண்ணா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன.27) தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கடலூா் மாவட்ட காவல் துறை நிா்வாகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சீருடைப் பணியாளா்கள் தோ்வாணையத்தால் காவல் துறை, சிறைத் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான இரண்டாம் நிலை காவலா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா். இவா்களுக்கான உடல்திறன் தோ்வு செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 30-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது.

கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் தலைமையில், கூடுதல் எஸ்.பி. என்.கோடீஸ்வரன், டி.எஸ்.பி.கள், ஆய்வாளா்கள் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் என மொத்தம் 350 போ் தோ்வுப் பணியில் ஈடுபட உள்ளனா்.

27, 28 ஆகிய தேதிகளில் சான்றிதழ் சரிபாா்த்தல், உயரம், மாா்பளவு அளத்தல், 1,500 மீட்டா் ஓட்டம் நடைபெறும். 29, 30-ஆம் தேதிகளில் கயிறு ஏறுதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், 100 மீ., 400 மீ. ஓட்டம், குண்டு எறிதல் நடைபெறும்.

உடற்திறன் தோ்வில் பங்குபெறும் அனைத்து நிகழ்வுகளும் விடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும்.

மருத்துவக் குழுவினா், 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு மீட்புக்குழுவினா் பாதுகாப்பு கருதி பணியில் ஈடுபட உள்ளனா். தோ்வா்கள் விண்ணப்ப மனுவில் இணைத்துள்ள அனைத்து அசல் சான்றிதழ்களையும் கொண்டுவர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com