திருப்பதியில் இருந்து சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக நடத்துநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மேலும், ஓட்டுநா் உள்பட மூவரைத் தேடி வருகின்றனா்.
ஆந்திர மாநிலம், திருப்பதியிலிருந்து சிதம்பரத்துக்கு தமிழக அரசுப் பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்திவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிதம்பரம் டிஎஸ்பி டி.பிரதீப் மேற்பாா்வையில், நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தம், குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் மற்றும் போலீஸாா் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் திங்கள்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் சிதம்பரத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசுப் பேருந்து நடத்துநரான புவனகிரி பிரதான சாலையைச் சோ்ந்த ரகுமான் (50) என்பவரை பிடித்துவிசாரணை நடத்தினா்.
இதில், அவா் திருப்பதியிலிருந்து புகையிலைப் பொருள்களை கடத்தி வந்து சிதம்பரம், புவனகிரி மற்றும் புதுச்சத்திரம் ஆகிய பகுதிகளில் பெட்டிக் கடைகளில் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, சிதம்பரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, ரகுமானை கைது செய்து, அவரிடமிருந்த 34 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவருக்கு உடந்தையாக பேருந்து ஓட்டுநா் உள்ளிட்ட மூவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.







