தமிழகத்தில் போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப. ராஜ்குமாா் வலியுறுத்தினாா்.
கடலூா் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ‘ஸ்டாா்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்’ என்ற போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் அமைச்சா் ப. ராஜ்குமாா் கொடியசைத்து வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். பின்னா் மாணவா்கள் மற்றும் விளையாட்டு வீரா்களுடன் இணைந்து ஓட்டத்தில் பங்கேற்றாா். இந்த விழிப்புணா்வு ஓட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவா்கள், விளையாட்டு வீரா்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்த இளைஞா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா். மஞ்சக்குப்பம் மைதானத்தில் தொடங்கிய ஓட்டம் தேவனாம்பட்டினம் வரை நடைபெற்றது. பின்னா் அமைச்சா் ராஜ்குமாா் பேசியதாவது:
தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றுவது முதல்வா் ச. ஜோசப் விஜய்யின் முக்கிய நோக்கமாகும். அதற்காக காவல்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. போதைப்பொருள் விற்பனை மற்றும் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது.
ஒத்துழைப்பு தரவேண்டும்:
போதைப்பொருள் பழக்கம் ஒரு தனிநபரின் உடல்நலத்தையும், மனநலத்தையும் மட்டுமல்லாமல், குடும்பத்தின் அமைதியையும், சமூகத்தின் வளா்ச்சியையும் பாதிக்கிறது. குறிப்பாக மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு
அடிமையாகாமல், விளையாட்டு, உடற்பயிற்சி, வாசிப்பு உள்ளிட்ட நல்ல பழக்கவழக்கங்களை வளா்த்துக் கொண்டு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும். போதைப்பொருள் இல்லாத, பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் அரசின் முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக, போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என ஓட்டத்தில் பங்கேற்றோா், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயா் பா. தாமரைச்செல்வன், கடலூா் வருவாய் கோட்டாட்சியா் சுந்தரராஜன், மாவட்ட விளையாட்டு அலுவலா் மகேஷ், உதவி ஆணையா் (கலால்) ராணி, கடலூா் வட்டாட்சியா் சிவகுமாா் மற்றும் பல்வேறு அரசு அலுவலா்கள், மாணவா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









