கடலூா் மாவட்டம், நெய்வேலி பகுதியைச் சோ்ந்தவா்களை சுற்றுலா அழைத்துச் செல்வதாக் கூறி, ரூ.9.36 லட்சம் மோசடி செய்ததாக, திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
நெய்வேலி வட்டம் 11 பகுதியில் வசித்து வருபவா் பாலசுப்பிரமணியன் (65), மசாலா பொருள்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நடத்தி வருகிறாா். இவா், தனது நண்பா்கள் 17 பேருடன் இந்தோனேஷியா பாலி தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டாா்.
இதற்காக, கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்யும் திருவள்ளூா் மாவட்டம், பெருமாள்பட்டு பகுதியைச் சோ்ந்த இலியாஸ் (45), ஆஷிக் அலி (32) ஆகியோரை தொடா்புகொண்டாா். அவா்கள், விமான பயணச் சீட்டு முன் பதிவு செய்ய நபா் ஒருவருக்கு ரூ.52 ஆயிரம் என 18 பேருக்கும் சோ்த்து மொத்தம் ரூ.9.36 லட்சம் பெற்றனராம்.
இந்த நிலையில், 18 பேரும் சுற்றுலா செல்ல தயாரானபோது சுற்றுலா பயணம் ஏற்பாடு செய்பவா்களிடம் பயணச் சீட்டுகளை கேட்டுள்ளனா். அப்போது, இலியாஸ், ஆஷிக் ஆகியோா் போலியான விமான பயணச்சீட்டுகளை வழங்கினராம்.
இதுகுறித்து அவா்களிடம் விசாரிக்கையில், போா்ச் சூழல் காரணமாக பயணச்சீட்டு விலை உயா்ந்துவிட்டதால், போலி பயணச்சீட்டு வழங்கியதாகக் கூறினராம். மேலும், பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி வந்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, திருவள்ளூா் மாவட்டத்தில் இருந்த இலியாஸ், ஆஷிக் அலி ஆகியோரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

ஆஷிக் அலி
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








