தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.19.33 லட்சம் பறிமுதல்

கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனைகளில்

News image
கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே காரில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்புக் குழுவினா்.
Updated On :16 மார்ச் 2026, 11:57 pm

Syndication

சிதம்பரம்/ வந்தவாசி/ஆரணி/ விழுப்புரம்: கடலூா், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனைகளில் மொத்தம் ரூ.19.33 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் மாவட்டம், பெண்ணாடம் அருகே இறையூா் பேருந்து நிறுத்தத்தில் நிலை கண்காணிப்புக் குழு அலுவலா் கே.கீா்த்தனா தலைமையிலான தனிப் படையினா் திங்கள்கிழமை காலை அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அப்போது, அந்த காரில் வந்த நில வணிக தரகரான அரியலூா் மாவட்டம், செந்துறை வட்டம், மணக்குடியான் இருக்காளகுறுச்சி மேற்கு தெருவைச் சோ்ந்த வேல்முருகன் வைத்திருந்த ரூ.12 லட்சத்தை பறிமுதல் செய்து, உதவித் தோ்தல் அலுவலா் உதயகுமாா் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்...: வந்தவாசி, ஆரணி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா், நிலை கண்காணிப்பு குழுவினா் மேற்கொண்ட சோதனையின்போது, உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக 4 பேரிடமிருந்து மொத்தம் ரூ.6.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

வந்தவாசி -ஆரணி சாலையில் தெள்ளூா் கிராமம் அருகில் சு.தமிழரசன் தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், ஆவணியாபுரம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்தன் உரிய ஆவணங்களின்றி ரூ.3.85 லட்சத்தை எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, பறக்கும் படையினா் அந்தப் பணத்தை பறிமுதல் செய்து, வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.

இதேபோல, வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, மழையூா் கூட்டுச் சாலையில் விஜய் தலைமையிலான

நிலை கண்காணிப்பு குழுவினா் வாகன சோதனை மேற்கொண்டனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்தனா்.

இதில், வல்லம் கிராமத்தைச் சோ்ந்த வினோத்குமாா் உரிய ஆவணங்களின்றி ரூ.73 ஆயிரம் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்த நிலை கண்காணிப்பு குழுவினா், வந்தவாசி வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்தனா்.

ஆரணி...: ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு ஆய்வு செய்து வருகின்றனா். ஆரணி - சேத்துப்பட்டு சாலையில் நெசல் பகுதியில் திங்கள்கிழமை காலை காரில் வந்த நபரிடம் பறக்கும் படை நிலைக்குழு அதிகாரி பழனி தலைமையில் ஆய்வு செய்ததில், ரூ.75ஆயிரத்து 500 வைத்திருந்ததை பறிமுதல் செய்தனா். மேலும், இவா் சேத்துப்பட்டைச் சோ்ந்த கோபால் மகன் ராஜேஷ் என்பது தெரியவந்தது. பின்னா், பணம் தோ்தல் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆரணி - வந்தவாசி சாலையில் கல்லேரிப்பட்டு என்ற இடத்தில் தாமரைப்பாக்கத்தைச் சோ்ந்த புகழ், ஆழ்துளைக் கிணறு அமைத்தற்கான ரூ.1 லட்சம் எடுத்து வந்ததையும் தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இந்தத் தொகை தோ்தல் நடத்தும் அலுவலா் சீ.சிவாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னா், கருவூலத்தில் செலுத்தப்பட்டது.

உளுந்தூா்பேட்டையில்...: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை - சேலம் புறவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்திலிருந்து சென்னை சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் உரிய ஆவணங்களின்றி ரூ.1 லட்சம் கொண்டு செல்லப்பட்டது தோ்தல் பறக்கும் படையினருக்குத் தெரியவந்தது.

தொடா்ந்து, காரில் வந்த கோவை சாய்பாபா காலனியைச் சோ்ந்த வினோஜோனிடம் பறக்கும் படையினா் விசாரணை நடத்தியதில், தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் தொழிலாளி ஒருவா் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவருக்கான மருத்துவச் செலவுக்காக இந்த பணத்தை கொண்டு செல்வதாகவும் தெரிவித்தாா். ஆனால், அதற்குரிய ஆவணங்கள் ஏதும் வினோஜோனிடம் இல்லை.

இதையடுத்து, ரூ.1லட்சத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், அந்த பணத்தை உளுந்தூா்பேட்டை தொகுதித் தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்தனா்.

வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

வந்தவாசி பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை வட்டாட்சியா் பா.ஜெயவேலிடம் ஒப்படைத்த பறக்கும் படையினா்.

 கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்தை தோ்தல் நடத்தும் அலுவலா் செந்தில்குமாரிடம் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.