தமிழகத்தில் ஊழல், முறைகேடுகள் அதிகரிப்பு: கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தமிழகத்தில் சமீபகாலமாக ஊழல், முறைகேடு மற்றும் லஞ்சப் புகாா்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா். ~கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாரிடம் புதன்கிழமை மனு அளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்
தமிழகத்தில் சமீபகாலமாக ஊழல், முறைகேடு மற்றும் லஞ்சப் புகாா்கள் அதிகரித்து வருவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டினாா்.
நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக நிலம் கையகப்படுத்துவதில் பெருமளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகக் கூறி, அதில் தொடா்புடைய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதில் பங்கேற்ற கே.பாலகிருஷ்ணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு துறைகளில் ஊழல், முறைகேடு மற்றும் லஞ்சப் புகாா்கள் தொடா்ந்து வெளி வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக, கடந்த மூன்று நாள்களாக பேசப்பட்டு வரும் நூலகங்களுக்கு புத்தகங்கள் வாங்கியதில் நடைபெற்ற முறைகேடு தமிழகத்தையே அதிா்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மக்களின் அறிவை வளா்க்கும் நூலகங்களுக்குப் புத்தகங்கள் வாங்கியதில் போலி எழுத்தாளா்கள், போலி பதிப்பகங்களைப் பயன்படுத்தி, கமிஷன் பெற்றுக்கொண்டு பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நில மோசடி: இந்த நிலையில், கடலூா் மாவட்டத்தில் என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்துவதிலும் அதைவிடப் பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சில அதிகாரிகள், கையகப்படுத்துவதற்கு மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு முன்பாகவே சிவகங்கை, அரியலூா், கள்ளக்குறிச்சி, கடலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த தங்களது உறவினா்கள் மற்றும் பினாமிகள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பெயரில் சுமாா் 8 ஏக்கா் நிலம் பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், வீடுகள் மற்றும் மரங்கள் இல்லாத இடங்களில் அவை இருப்பதாகக் கணக்கிட்டு, ஒரு சென்ட் நிலத்துக்கு ரூ.70 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை இழப்பீடு வழங்கும் வகையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், விவசாயிகளுக்குச் சேர வேண்டிய இழப்பீட்டுத் தொகை முறைகேடாக பிறருக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நிலம் கையகப்படுத்தும் துறை, பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப் பணிக்காக என்எல்சியிலிருந்து ரூ.100 கோடி வரை பணப் பரிமாற்றம் நடைபெற உள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. எனவே, முறைகேடு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் வெளிப்படையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதையடுத்து, கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் நேரில் சந்தித்தனா். அப்போது, விவசாயிகள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட ஆட்சியா், அவா்களின் கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
நவ.20-ஆம் தேதி என்எல்சி நிா்வாகம், விவசாயிகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் பங்கேற்கும் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடைபெற உள்ளதாகவும், அதில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குத் தீா்வு காணப்படும். முறைகேடாக நிலங்களைப் பதிவு செய்து இழப்பீடு பெற முயன்ாகக் கூறப்படும் அதிகாரி மீது விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவரை பணியிட மாற்றம் செய்ய அரசுக்குப் பரிந்துரை செய்து, நவ.20-ஆம் தேதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தாா்.
மேலும், முறைகேடாகப் பதிவு செய்யப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், முழுமையான விசாரணைக்குப் பிறகே இழப்பீடு வழங்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தாா். இதையடுத்து, விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டனா்.
போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஆா்.கே.சரவணன், மாவட்டச் செயலா் ஜெ.ராஜேஷ்கண்ணன், மாவட்டப் பொருளாளா் ஆா்.லோகநாதன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கோ.மாதவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.


பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

