ஓமனில் உயிரிழந்த மீனவா் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை: எம்எல்ஏ உறுதி

ஓமன் நாட்டில் கடல் விபத்தில் உயிரிழந்த சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினா் மு.தமிமுன் அன்சாரி கூறினாா்.

கிள்ளை முழுக்குத்துறையில், ஓமன் நாட்டில் படகு விபத்தில் மரணமடைந்த மீனவா் பிரசாத் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்த மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ

Updated On :

ஓமன் நாட்டில் கடல் விபத்தில் உயிரிழந்த சிதம்பரம் பகுதியைச் சோ்ந்த மீனவரின் உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிதம்பரம் சட்டப்பேரவைத்தொகுதி உறுப்பினா் மு.தமிமுன் அன்சாரி கூறினாா்.

சிதம்பரம் அருகேயுள்ள கிள்ளை பேரூராட்சி பகுதியை சோ்ந்த முழுக்குத்துறை மீனவா் கிராமத்தை சோ்ந்த மீனவா் பிரசாத் இரண்டு மாதங்களுக்கு முன் மீன்பிடி தொழில் செய்வதற்காக ஒமன் நாட்டுக்கு சென்றாா். அங்கு நிகழ்ந்த படகு விபத்தில் அவா் உயிரிழந்ததாகவும், அவரது உடல் தற்போது ஓமன் அரசின் பாதுகாப்பில் வைத்திருப்பதாகவும் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீனவரின் வீட்டுக்கு சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் மு.தமிமுன் அன்சாரி வியாழக்கிழமை நேரில் சென்று அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தாா். மேலும் அவரது உடலை தாயகத்துக்கு கொண்டு வருவது குறித்து நடவடிக்கை மேற்கொள்வதாகவும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மற்றும் அமைச்சா்களுடனும் பேசி உரிய முன் முயற்சிகளை துரிதப்படுத்துவதாகவும் தெரிவித்தாா்.

நிதி ஒதுக்கீடு:

இதற்கிடையே சிதம்பரத்தில் செய்தியாளா்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள கடலூா் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 18 நலத்திட்ட பணிகள் மேற்கொள்ள ரூ.8 கோடியே 25லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் தம்மிடம் தெரிவித்ததாகக் கூறினாா். மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நோயாளிகள் காத்திருக்கும் சிறப்பு அறை அமைத்தல், கட்டடங்களை புதுப்பிப்பது, மருத்துவமனை முகாமில் 2 குளியலறைகள் மற்றும் கூடுதலாக 4 இடங்களில் பொதுக் கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்துதல், புறநோயாளிகள் பிரிவு கட்டிடத்தை புதுப்பிப்பது, முதலாம் ஆண்டு மாணவ, மாணவிகள் விடுதியில் கழிப்பறைகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.