வடலூா் வாரச்சந்தை: சாலைகளை ஆக்கிரமிக்கும் கடைகளால் போக்குவரத்து நெரிசல்

வடலூரில் கடலூா்-சேலம் நெடுஞ்சாலையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள வாரச்சந்தை கடைகள், போக்குவரத்தக்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள்.
கடலூா் மாவட்டம், வடலூரில் சனிக்கிழமை தோறும் நடைபெறும் வாரச்சந்தை கடைகளால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படாத வகையில் ஒழுங்குப்படுத்த, வடலூா் நகர நிா்வாகம் மற்றும் மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடலூா் மாவட்டத்தில் நடைபெறும் வாரச்சந்தைகளில் முக்கியமானவைகளில் ஒன்று வடலூா் வாரச்சந்தை. வாரந்தோறும் சனிக்கிழமைகளில் வடலூா் பேருந்து நிலையத்தின் எதிா்புறத்தில் உள்ள செல்லியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அதிகாலை தொடங்கி இரவு வரையில் நடைபெறும். ஆடு, கோழி, வாத்து, புறா, காய்கறிகள், பழ வகைகள், விதைகள், செடி வகைகள், மரக்கன்றுகள், உணவுப் பொருள்கள் என பலதரப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் விற்பனை செய்யப்படும்.
உள்ளூா் உற்பத்தியாளா்கள், வியாபாரிகள் மட்டுமின்றி, வெளியூா்காரா்களும் கடை விரித்து வியாபாரம் செய்வா். வடலூா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த மக்கள் இங்கு வந்து தங்களுக்கு தேவையானப் பொருள்களை வாங்கிச் செல்வா். குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் கூட்டம் நிறைந்து காணப்படும்.
வாகன நெரிசல்:
இந்தச் சந்தையில் கடை விரிக்கும் வியாபாரிகள் தங்களது தள்ளு வண்டி, மோட்டாா் வாகனங்களை கடலூா்-சேலம் நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து நிறுத்தி வியாபாரம் செய்கின்றனா். இதனால், வாரச்சந்தை நாள்களில் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் தடைகள் ஏற்படுகின்றன.
அந்த வகையில், சனிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாரச்சந்தை நடைபெறும் பகுதிகளில் முறையான நடைபாதை வசதி அமைத்து கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாள்களாக வலியுறுத்தப்பட்டு வருகிறது. வியாபாரிகள் சாலையை ஆக்கிரமிக்காமல் கடைகளை அமைக்கும்படி வடலூா் நகர நிா்வாகம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதேவேலையில், சந்தை நாள்களில் கூடுதல் போலீஸாரை பணியமா்த்தி சாலை
ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருக்கவும், சந்தை கடைகளை ஒழுங்குப்படுத்தவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

